Israel Palestine conflict: இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் காசா? நாட்டு மக்களுக்கு பெஞ்சமின் நெதன்யாகு உரை!!
காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 790 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. 5,330 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் இருந்த மூன்று நீர் மற்றும் துப்புரவு தளங்கள் சேதமடைந்ததால் 400,000 சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ''நாங்கள் போரை துவங்கவில்லை. ஆனால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதை முடிப்போம்'' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஒரே நேரத்தில் இஸ்ரேல் மீது வீசி தாக்கினர். இதில் நிலைகுலைந்த இஸ்ரேல் உடனடியாக பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காசா மீது முழு முற்றுகை: இஸ்ரேல் அறிவிப்பு - போர் குற்றம்?
இஸ்ரேலுக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்புவதற்கு அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்து இருப்பதாகவும், காசா நோக்கி இவை பயணித்துக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், அமெரிக்காவின் நிலைப்பாடு, எந்தளவிற்கு இஸ்ரேலுக்கு உதவுகிறது என்பதையும் மறுபக்கம் சீனாவும், ரஷ்யாவும் கவனித்து வருகின்றன. பாலஸ்தீன நாட்டுக்கு ஆதரவாக ஏற்கனவே செயல்பட்டு வரும் ரஷ்யா இந்த முறை கண்டிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக களத்தில் இறங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, பாலஸ்தீன நாட்டிற்கு சவூதி அரேபியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் வகையில், இஸ்ரேல் 3 லட்சம் துருப்புகளை களத்தில் இறக்கியுள்ளது. 1973ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. 1973ஆம் ஆண்டில் நடந்த போரில் சுமார் 4 லட்சம் வீரர்களை இஸ்ரேல் களத்தில் இறக்கி இருந்தது.
ஒருமித்த குரலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 5 மேற்கத்திய நாடுகள்
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களுக்கு அளித்திருந்த செய்தியில், ''இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. நாம் இந்தப் போரை வரவேற்கவில்லை. ஆனால், மிகவும் மோசமான முறையில் நம் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது. நாம் இந்தப் போரை துவக்காவிட்டாலும், இந்தப் போரை நாம் முடிப்போம். அவர்களது செயலுக்கு விலை கொடுப்பார்கள். இதன் விளைவு அவர்களது வாழ்க்கையிலும் மறக்க முடியாத அளவிற்கு இருக்கும்.
இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் தவறானது என்பதை ஹமாஸ் புரிந்து கொள்வார்கள். இஸ்ரேலின் மற்ற எதிரிகளுக்கும் இது பொருந்தும். அப்பாவி இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்கியுள்ளது. குடும்பங்களை அவர்களது வீடுகளில் படுகொலை செய்தது, நூற்றுக்கணக்கான இளைஞர்களை திருவிழாவில் படுகொலை செய்தது, ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கடத்தியது, குழந்தைகளைக் கட்டி, எரித்து, தூக்கிலிட்டது என்று ஹமாஸ் தீவிரவாதிகள் காட்டுமிராண்டிகள் போல் நடந்து கொண்டுள்ளனர்.
ஹமாஸை ஐஎஸ்ஐஎஸ் என்று முத்திரை குத்தி, நாகரிக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஹமாஸை தோற்கடிக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ தோற்கடிக்க நாகரீக சக்திகள் எப்படி ஒன்றுபட்டதோ, அதேபோல் ஹமாஸை தோற்கடிக்க இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டும்'' என்று பெஞ்சமின் நெதன்யாகு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்கு உதவ முன் வந்து இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட ஆதரவு தெரிவித்து இருக்கும் நாடுகளுக்கு பெஞ்சமின் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையில் இருந்து நடந்து வரும் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் மட்டும் இதுவரை 700க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,300க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். இருதரப்பிலும் சுமார் 1,600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காசாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.