ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அல்பாக்தாதியை ஈராக் ராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மொசூல் நகரை மீட்கும் போராட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி கொல்லப்படட்டாலோ அல்லது தோற்றாலோ அந்த அமைப்பின் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிடும் என தி இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைநகர் பாக்தாத்தில் இருந்து 400கி.மீ. தொலைவில் மொசூல் நகரம் அமைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த நகரைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நகரை மீட்க ஈராக் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டும் நெருங்கமுடியவில்லை.
இந்நிலையில் அமெரிக்க கூட்டுப்படைகள், குர்து படை,ஷியா படை ஆகியோரின் துணையுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். அமைப்பை எதிர்த்து போராடி வருகிறது. கடந்த சில வாரங்களாக மொசூல் நகரைக் கைப்பற்றும் போராட்டத்தில், இந்த படைகள் தீவிரமாக இறங்கியு, தற்போது, அந்த நகரை சுற்றிவளைத்துள்ளன.
மொசூல் நகரில் தற்போது 5 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈராக் படைகள் போரிட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசுப்படைகள் முன்னேறி வருகின்றன.
இது குறித்து குர்து இனப்படைகள் அமைப்பின் தலைவர் பவாத் ஹூசைன் தி இன்டிபென்டென்ட் நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது :
மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி இருக்கும் இடத்தை ஈராக் படைகள் சுற்றி வளைத்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. ஒருவேளை பாக்தாதி கொல்லப்பட்டால், ஒட்டுமொத்தமாக ஐ.எஸ். அமைப்பு சீர்குலைந்து அழிந்துவிடும். பாக்தாதி கடந்த 9 மாதங்களாக தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒளிந்து வாழ்ந்து வருகிறார். அவர் ஐ.எஸ். அமைப்பின் வீரர்களையே அதிகமாகச் சார்ந்துள்ளார்.
ஒருவேளை இந்த தாக்குதலில் அல்பாக்தாதி கொல்லப்பட்டால், போருக்கு இடையே புதிய தலைவரை ஐ.எஸ். அமைப்பினரால் தேர்வு செய்வது எளிதான காரியமல்ல. அதுவும் பாக்தாதி அளவுக்கு திறமையான தலைவர்கள் இப்போது அந்த அமைப்பில் யாரும் இல்லை. பாக்தாதி கொல்லப்பட்டால், அதன்பின், எத்தனை நாட்களுக்கு அந்த அமைப்பு நீடிக்கும் என்று கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
