அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி சசி தரூரை அவரது மகன் இஷான் தரூர் கேள்விகளால் துளைத்தெடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Who is this Ishaan Tharoor?:: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி அழித்தன. இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர்

இதன்பிறகு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதனால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் அங்குளள ஏராளமான விமானப்படைத் தளங்களை தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இதன்பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலையீட்டின் பேரில் இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது.

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை விளக்கும் குழு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் விளக்குவதற்காக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு பல்வேறு நாடுகளுக்கு சென்று விளக்கம் அளித்தது. காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்ற‌து. இந்த குழு நியூயார்க்கில் உள்ள வெளியுறவு கவுன்சிலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது.

அப்பாவை கேள்வி கேட்ட சசி தரூர் மகன்

அப்போது வாஷிங்டன் போஸ்ட்டின் செய்தியாளர் ஒருவர், ''நான் ஒரு கேள்வி கேட்கலாமா'' என கையை உயர்த்தினார். அப்போது சசிதரூர், ''கண்டிப்பாக கேள்வி கேட்கலாம். அதற்கு முன் எழுந்து நின்று ஒரு ஹாய் சொல்லலாமே'' என்றார். அப்போது அந்த செய்தியாளர் எழுந்ததும் ''இவர் எனது மகன்'' என்று சசி தரூர் சொல்ல அங்கு இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

பாகிஸ்தான் தான் தாக்குதல் நடத்தியது என்பதற்கான ஆதாரம் உள்ளதா?

இதனைத் தொடர்ந்து அந்த செய்தியாளரான சசி தரூர் மகனான இஷான் தரூர், ''ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு நாடுகள் விளக்கம் அளித்து வருகிறீர்கள். எந்த நாடோ அல்லது அந்த நாட்டின் தூதரகமோ பாகிஸ்தான் தான் முதலில் தாக்குதல் நடத்தியது என்பதற்கான ஆதாரம் உங்களிடம் (இந்தியா) உள்ளதா என்று கேட்டதா?'' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மகன் கேள்விக்கு சசிதரூரின் பதில்

தனது மகனின் கேள்விக்கு பதிலளித்த தரூர், "நீங்கள் இதை எழுப்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிக எளிமையாகச் சொன்னால் பாகிஸ்தான் முதலில் தாக்குதல் நடத்தியது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆகையால் எந்த நாடும் ஆதராம் கேட்கவில்லை'' என்றார். மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதற்கான 3 காரணங்களை சசி தரூர் விளக்கிக் கூறினார்.

பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடர்பு

அதாவது 2008 இல் மும்பையில் பயங்கரவாத தாக்குதல்களின்போது பிடிபட்ட பயங்கரவாதி எங்கே பயிற்சி பெற்றார்? என்பதும் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது யார்? என்பதும் நாம் அனைவருக்கும் தெரியும் என்று சசிதரூர் தெரிவித்தார். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் நன்கு அறியப்பட்ட பினாமியான TRFபாகிஸ்தானில் உள்ள முரிட்கே நகரில் பாதுகாப்பான புகலிடத்தை அனுபவிக்கிறது என்பது ஆதராத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் இறுதிச்சடங்கு நடத்தியதையும் சசி தரூர் மகன் கேட்ட கேள்விக்கு பதிலாக எடுத்துரைத்தார்.

யார் இந்த இஷான் தரூர்?

இஷான் தரூர் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகன் ஆவார். இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் உலகளாவிய விவகார பத்திரிகையாளராக உள்ளார். 1984 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் சசி தரூர் தூதராகப் பணியாற்றியபோது அங்கு தான் இஷான் தரூர் பிறந்தார். இவர் தவிர சசி தரூரின் மற்றொரு மகன் கனிஷ்க் தரூர்.

நிருபராக வாழ்க்கையை தொடங்கிய இஷான் தரூர்

இஷான் தரூர் 2006 ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வரலாறு மற்றும் இனம், இனம் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றில் முதன்மைப் பட்டம் பெற்றார். அவரது LinkedIn சுயவிவரத்தின்படி, அவர் சட்லர் பெல்லோஷிப்பைப் பெற்றார். இஷான் 2006 ஆம் ஆண்டு டைம் பத்திரிகையில் ஒரு நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் நியூயார்க் நகரப் பகுதிக்கான மூத்த ஆசிரியராக பதவி உயர்வு பெற்ரார். பின்பு 2014 ஆம் ஆண்டு டைம் பத்திரிகையை விட்டு வெளியேறி அமெரிக்க தலைநகரில் உள்ள வாஷிங்டன் போஸ்ட்டில் சேர்ந்தார்.

பல்கலைக்கழக பேராசிரியர்

இஷான் ஒரு ஆசிரியராகவும், 2018 முதல் இரண்டு ஆண்டுகள் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் துணைப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அவரது LinkedIn சுயவிவரத்தின்படி, அவர் அந்த பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு சேவைப் பள்ளியில் 'டிஜிட்டல் யுகத்தில் உலகளாவிய விவகாரங்கள்' கற்பித்தார். தனது அப்பாவைப் போலவே, இஷான் தரூர் ஏற்கனவே உலக அரங்கில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.