ரோமில் அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க அமெரிக்கா விரும்புகிறது, ஆனால் ஈரான் அதன் யுரேனியம் செறிவூட்டலைக் குறைக்க விரும்பவில்லை.

Iran - US nuclear talks in Rome: இத்தாலி தலைநகரான ரோமில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரண்டு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையாகும் இது. 

ஈரானிடம் அணுஆயுதங்கள்:
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், இது உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார். மேலும், அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும், இல்லை என்றால் ஈரான் மீது இதுவரை நடந்திராத வகையில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து இருந்த ஈரானும், பதுங்கு குழிகளில் தயாராக அணுஆயுத ஏவுகணைகளை வைத்திருப்பதாகவும், தாங்களும் பதிலடி கொடுப்போம் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது இரண்டு நாடுகளும் தங்களுக்குள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஓமன் அரசு நடுநிலை வகிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

ரஷ்யாவை அணுகிய ஈரான்:
அமெரிக்காவுடனான இன்றைய இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ஈரான் அதன் வேகமாக முன்னேறி வரும் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஒரு சாத்தியமான ஒப்பந்தத்திற்கு ரஷ்யாவின் ஆதரவை நாடியுள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, கடந்த வாரம் ஓமனில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை குறித்து மாஸ்கோவில் தனது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம் விளக்கி இருந்தார்.

தனித்து விடப்பட்ட ஈரான் அமெரிக்காவிடம் சரணடைந்ததா? அணு ஆயுத பேச்சுக்கு சம்மதம்!!

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் - ரோமில் அப்பாஸ் அராக்சி
தனது டெலிகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பேச்சுவார்த்தைக்காக ரோம் வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ''வாஷிங்டன் யதார்த்தமாக இருக்கும் வரை, அமெரிக்காவுடனான தனது அணுசக்தித் திட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டுவது சாத்தியம் என்பதை ஈரான் நம்புகிறது'' என்று கடந்த வாரம் மாஸ்கோவில் அராக்சி குறிப்பிட்டு இருந்தார்.

அதீத நம்பிக்கை இல்லை - அயதுல்லா அலி கமேனி கருத்து 
ஈரானிய அதிகாரிகள் சிலர் அமெரிக்கா விதித்து இருக்கும் பொருளாதாரத் தடைகள் விரைவில் நீக்கப்படலாம் என்று ஊகித்துள்ளனர். விரைவான ஒப்பந்தத்திற்கான எதிர்பார்ப்புகளை குறைக்க டெஹ்ரான் முயன்றுள்ளது. ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவராக அயதுல்லா அலி கமேனி இருக்கிறார். அவர் சமீபத்தில் பேச்சுவார்த்தை தொடர்பான தனது மறைமுக கருத்தில், ''அதீத நம்பிக்கையோ அல்லது அவநம்பிக்கையோ இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அணுஆயுதம் டிரம்ப் கருத்து 
டிரம்ப் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதைத் தடுப்பதற்கு நான் ஆதரவளிக்கிறேன். அவர்களிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. ஈரான் சிறந்ததாகவும், வளமானதாகவும், அற்புதமாகவும் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்'' என்று தெரிவித்து இருந்தார். 

அணுகுண்டு முதல் ஏவுகணை வரை: ஈரானின் திறன் என்ன? உலகம் ஏன் கவலைப்படுகிறது?

ஈரான் மீது பொருளாதாரத்தடை 
கடந்த 2018 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில் ஈரானுக்கும் ஆறு வல்லரசுகளுக்கும் இடையிலான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டு, டெஹ்ரான் மீது பொருளாதாரத் தடையை டிரம்ப் விதித்து இருந்தார். தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்ற நாளில் இருந்து ஈரான் மீது அணுசக்தி ஒப்பந்தத்தை வலியுறுத்தி வருகிறார். 

ஈரானிடம் செறிவூட்டப்பட்ட யுரேனியம்
ஈரானிடம் அணுஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அதிகமாக இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது. மேலும், இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு அணுகுண்டுகளை ஈரான் தயாரிக்கலாம் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது. எனவே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் உற்பத்தியை ஈரான் நிறுத்த வேண்டும் என்று வாஷிங்டன் விரும்புகிறது.

யுரேனியம் செறிவூட்டலை முற்றிலுமாக நிறுத்துமா ஈரான்?
ஈரான் அதன் யுரேனியம் செறிவூட்டல் மீதான 2015 ஒப்பந்தத்தின் வரம்புகளை மீறி, மிக அதிகமாக வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இதை ஈரான் மறுத்துள்ளது. ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையங்களை அகற்றவோ, செறிவூட்டலை முற்றிலுமாக நிறுத்தவோ, செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் குறைக்கவோ 2015 ஒப்பந்தத்தில் ஒருபோதும் ஈரான் உடன்படவில்லை என்று அந்த நாட்டின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஈரானிடம் இருக்கும் யுரேனியம் கொண்டு 8 அணுகுண்டு தயாரிக்கலாம் 
தற்போது, ​​ஈரானிடம் 8 முதல் பத்து அணு குண்டுகளை உருவாக்க யுரேனியம் கையிருப்பு உள்ளது. 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தினால், ஈரான் தனது யுரேனியம் கையிருப்பை 98% குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. யுரேனியம் செறிவூட்டல் அளவை 3.67% ஆக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது அணுகுண்டு உருவாக்க தேவையான செறிவூட்டல் அளவை விட கணிசமான அளவு குறைவாகும்.

அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தம் காலாவதி எப்போது?
2015ஆம் ஆண்டில் உலகின் வல்லரசுகளாக இருந்த அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஈரானுடன் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தம் மேற்கொண்டது. ஈரானில் அணுசக்தி சோதனை மேற்கொள்ள இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது. 15 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 2018ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார். அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார்.