கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதிஅரபியா: போருக்கு தயாரா- அமெரிக்காவுக்கு சவால்விட்ட ஈரான்
சவுதிஅரேபியாவில் உள்ள ஆரம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. போாருக்கு வரத்தயாரா என்று அமெரிக்காவுக்கு ஈரான் சவால் விடுத்துள்ளது
சவூதியில் உள்ள அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த ஆலைகள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது இதனால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உலகிற்கு மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையரான சவுதி அரேபியா திடீரென தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது
இந்தத் தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.ஏமனில் தங்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக சவூதி எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்த தாக்குதலுக்கு ஈரானை கடுமையாகக் கண்டித்துள்ளார். ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு பின்புலத்தில் ஈரான் இருப்பதாகக் கூறி அவர் கண்டித்துள்ளார். உலகின் கச்சாஎண்ணெய் சப்ளையை கொண்டிருக்கும் இந்த ஆலையில் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றார்
இதற்கு ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாள் அப்பாஸ் மொசாவி ஊடகங்களிடம் கூறுகையில், “ அமெரி்க்காவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம். ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்தான் தாக்குதலுக்கு காரணம் எனத் தெரிந்திருந்தும் எங்கள் மீது பழிபோடுகிறது அமெரிக்கா. ஈரான் எப்போதும் அமெரிக்காவுக்கு எதிராக போரிடத் தயாராக இருக்கிறது. எங்களைச் சுற்றி 2 ஆயிரம் கி.மீ தொலைவில்தான் அமெரிக்கா படைகள் இருப்பதை ஒவ்வொரும் அறிந்து கொள்ள வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் வளைகுடா பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.