அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தானது.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா்.

அதன் தொடா்ச்சியாக, ஈரான் கட்டுமானத் துறையைக் குறிவைத்து அமெரிக்கா தற்போது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஈரான் மூன்று முறை பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மோா்கன் ஆா்ட்டேகஸ் வியாழக்கிழமை கூறியதாவது:

ஈரானின் கட்டுமானத் துறைக்குப் பயன்படும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களுக்குத் தடை விதித்து வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ உத்தரவிட்டுள்ளாா்.

அந்த நாட்டின் கட்டுமானத் துறை நேரடியாகவும், மறைமுகமாகவும் இஸ்லாமிய புரட்சிப் படையினரால் கட்டுப்படுத்தப்படுவதாக தெரியவந்தது. அதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஈரான் அணுசக்தி திட்டங்கள் கண்காணிப்பின் கீழ் இருப்பதை உறுதி செய்யவும், அணு ஆயுதப் பரவல் அபாயத்தைத் தடுக்கவும் இந்தத் தடைகள் உதவும். என்றார்அவா்.