ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.  

சுலைமானி கொலைக்கு காரணமான அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள  அமெரிக்க படைகள், அதன் கூட்டணி படைகள்  உள்ள ராணுவ தளம்  மீது  மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 

10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.  தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.  ஈரானின் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால்,  மத்திய கிழக்கு நாடுகளில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணய் விலை 3.5 சதவீதம் உயர்ந்துள்ளது.