அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில், தமிழர்கள் 3 பேர் உள்ளிட்ட 5 இந்தியர்கள் வெற்றி பெற்று, செனட்டர்கள்(மேல்சபை) மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு(கீழ்சபை) தேர்வாகியுள்ளனர்.
அமெரிக்க இந்தியர்களான கமலா ஹாரிஸ்(வயது51), பிரமிளா ஜெயபால்(வயது51), ராஜா கிருஷ்ணமூர்த்தி(வயது42), ரோ கண்ணா மற்றும் அமி பேரா ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் கலிபோர்னியா மாநில அரசு வழக்கறிஞராக இரு முறை இருந்த கமலா ஹாரிஸ் செனட்டர் அவைக்கு தேர்வாகியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு தேர்வான முதல் இந்தியர் மற்றும் முதல் இந்திய பெண் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதில் பிரமிளா ஜெயபால், சீட்டல் தொகுதியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார். இந்த தொகுதியில் இருந்து தேர்வாகும் முதல் அமெரிக்க இந்தியப் பெண் பிரமிளா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2-வது முறையாக போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற அமெரிக்க இந்தியரும் தேர்தலில் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார்.
இதில் ரோ கண்ணா மற்றும் அமி பேரா ஆகியோர் கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து தேர்வாக உள்ளனர். கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலியில் தேர்தல் முடிந்து 56 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஜனநாயகக்கட்சியின் அமி பேரா 54 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்தது போட்டியிட்ட குடியரசுக்கட்சி வேட்பாளர் ஸ்காட் ஜோன்ஸ் 46 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.
இந்த முறையும் அமி பேரா வெற்றி பெற்றால், தொடர்ந்து 3-வது முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்வான அமெரிக்க இந்தியர் எனும் பெருமையைப் பெறுவார்.
கலிபோர்னியாவின் 17-வது மாவட்டத்தில் 72 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ரோ கண்ணா 58 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
இதில் ஹாரிஸ், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அமி பேரா ஆகியோர் அதிபர் பாரக் ஒபாமாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். அதேபோல, முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர், செனட்டர் பெர்னே சான்டர்ஸ் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டவர் பிரமிளா ஜெயபால் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைப் பெண் பிரமிளா ஜெயபால்
முதல்முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பிரமிளா ஜெயபால் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார். சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால், தனக்கு 5 வயது இருக்கும் போது இந்தோனேசியாவுக்கு குடியேறினார். அதன்பின், சிங்கப்பூரிலும் இறுதியாக அமெரிக்காவிலும் குடியேறி வசித்து வருகிறார்.
25 ஆண்டுகளுக்குப் பின், கடந்த 1995-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு பிரமிளா திரும்பினார். இது குறித்து இந்தியாவுக்கு ஒரு புனிதப்பயணம்- ஒரு பெண் தனது தாய்நாட்டுக்கு மீண்டும் வருகிறாள் என்ற புத்தகத்தை பிரமிளா எழுதி, 2000ம் ஆண்டில் வௌியிட்டார்.

ரோ கண்ணா என்பவர் யார்?
அமெரிக்க இந்தியரான ரோ கண்ணா(வயது40) யேழ் பல்கலையில் சட்டப்படிப்பு முடித்தவர்.அதிபர் ஒபாமாவின் அமைச்சரவையில் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து 17-வது மாவட்டத்தின் சார்பில் தேர்வாகியுள்ளார்.
சாதனைபுரியும் பேரா...
51 வயதாகும் அமெரிக்க இந்தியரான பேரா, 3-வது முறையாக இந்த தேர்தலில் பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டார். இதில் இவர் பெற்றால், தொடர்ந்து 3 முறை பிரதிநிதிகள் சபைக்கு தேர்வான இந்தியர் எனும் பெருமையைப் பெறுவார்.
