இந்தியர்களுக்கு அடித்தது முதல் யோகம்; ஆண்டுதோறும் இங்கிலாந்து செல்ல 3000 பேருக்கு விசா; ரிஷி சுனக் ஒப்புதல்!!
இந்தியாவில் இளம் தொழில் வல்லுநர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் பணிபுரிய 3,000 விசா வழங்குவதற்கான ஒப்புதலை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து, இந்தியா இடையே இடம் பெயர்வு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி முதன் முறையாக இந்தியா விசா சலுகையை பெற்றுள்ளது என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய இந்திய இளம் தொழில் வல்லுனர்கள் திட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் 3000 பேருக்கு விசா வழங்கப்படும். 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த விசா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது இரண்டு ஆண்டுகள் மட்டுமே இங்கிலாந்தில் இவர்கள் பணியாற்ற முடியும். இதுகுறித்த அறிவிப்பை இங்கிலாந்து பிரதமரின் அலுவலகமும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இங்கிலாந்து செல்ல விரும்பும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ அல்லது மூன்று ஆண்டுகள் இளங்கலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். விசாவிற்கு ஸ்பான்சர்ஷிப் அல்லது பெயரிடப்பட்ட நிறுவனத்திடமிருந்து வேலை வாய்ப்பு அழைப்பு பெறப்பட்டு இருக்க வேண்டும். இருப்பினும் தகுதிகள் குறித்து இன்னும் வரையறுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானவர்கள் தகுதித் தேர்வுகளை பூர்த்தி செய்வதால், விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். சில நாடுகளில் விசா வழங்குவதற்கு வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதைப் போல் இதற்கும் லாட்டரி முறை அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த வாய்ப்பை, ஐடி நிறுவனங்கள் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. இங்கிலாந்திற்குள் திறமையான ஐடி வல்லுனர்களை கொண்டு செல்வதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் பாலியில் நடந்து வரும் ஜி 20 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு நடந்த முடிந்த சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக பாலியில் இருவரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.