மக்களின் நம்பிக்கையை பெற்ற மோடி அரசு..! சர்வதேச ஆய்வில் தகவல்..!
உலக அளவில், மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசுகளின் பட்டியலில் மோடி தலைமையிலான இந்திய அரசு 3வது இடத்தை பிடித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு(ஓஇசிடி) அமைப்பில் 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில், உலக அளவில் பொதுமக்களின் நம்பிக்கையை பெற்ற அரசு எது என்பது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில், சுவிட்சர்லாந்து அரசு முதலிடத்தையும், இந்தோனேஷிய அரசு இரண்டாம் இடத்தையும் மோடி தலைமையிலான இந்திய அரசு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
மோடி தலைமையிலான இந்திய அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக 74% மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு, உலக அளவில் பிரதமர் மோடி மீதான மதிப்பீட்டை மேலும் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளும் வரி சீர்திருத்தங்களும் இந்திய மக்களிடம் அவரது அரசின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 4-ல் 3 பேர் பிரதமர் மோடியின் அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக கூறியுள்ளதாக ஓஇசிடி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட வரி சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்துவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மக்களின் நம்பிக்கையை மத்திய அரசு இழந்துவிட்டது என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசுகளின் பட்டியலில் பிரதமர் மோடியின் தலைமையிலான இந்திய அரசு மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவு, பிரதமர் மோடி மீதும் அவரது தலைமையிலான மத்திய அரசின் மீதும் மக்கள் அதீத நம்பிக்கையை வைத்துள்ளதை வெளிப்படுத்துகிறது.