Russia-Ukraine Crisis : திடீரென ரஷ்ய அதிபருக்கு CALL செய்த பிரதமர் மோடி.. இதுதான் பேசினாரா..?
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது. ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர்.
ராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷியா, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள். இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, இந்தியா இதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும், ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் இகோர் பாலிகா தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார் என்றும், பிரதமர் மோடி உக்ரைனுக்கு எதிராக போரை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.