உலகில் அதி செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி..!! இந்தியாவை சேர்ந்த 4 பேருக்கு இடம்.
அதேபோல் பல்வேறு வாக்குறுதிகளின் மூலம் மோடி ஆட்சிக்கு வந்தார், ஆனால் அவர் சார்ந்துள்ள இந்து தேசியவாத பாஜக நாட்டின் பன்மைத்துவத்தை நிராகரித்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து செயல்படுகிறது.
உலகில் அதி செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கை உலகில் பிரபலம் மற்றும் மக்கள் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. அதில் மோடிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி முஸ்லிம்களை குறிவைத்து அரசியல் செய்வதாகவும், இந்துத்துவ மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும் அந்த பத்திரிகை விமர்சித்துள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற தலைவர்களின் பட்டியலில் எப்போதும் பிரதமர் மோடிக்கு தனியிடமுண்டு. இதுவரை இந்தியாவில் எந்த பிரதமருக்கும் இல்லாத அளவிற்கு உலக நாடுகளில் பிரதமர் மோடிக்கு மிகுந்த செல்வாக்கு இருந்து வருகிறது. அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவர்களுடன் நெருங்கி பழகக்கூடியவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார். அதேபோல் பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஆர்வம் காட்டுவதை நாம் காணமுடிகிறது. அதேபோல் எல்லை விவகாரமாக இருந்தாலும் சரி, பெருந்தொற்றுக்கு எதிரான களமாக இருந்தாலும் சரி, பிரதமர் மோடி துணிச்சலாகவும், சாதுர்யமாகவும் எதிர்கொண்டு வருகிறார் என்ற கருத்து அவர் மீது இருந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ் பிரதமர் நரேந்திர மோடியை உலகின் மிகவும் செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் இணைத்துள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனத்தையும் அது முன்வைத்துள்ளது. அதாவது இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், என இன்னும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும், ஆனால் இந்துக்களே பெரும்பான்மையாக இருப்பதாகவும் டைம்ஸின் ஆசிரியர் கார்ல் விக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மோடி அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதகமாக செயல்பட கூடியவரா? என்பது குறித்து அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ள அந்நாளிதழ் ஆசிரியர் கார்ல் விக் இந்தியாவில் பெரும்பாலான பிரதமர்கள் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். நாட்டில் 80% மக்கள் இந்துக்களாக உள்ளனர். ஆனால் மோடி அனைத்து தரப்புக்குமான தலைவராக தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார்.
அதேபோல் பல்வேறு வாக்குறுதிகளின் மூலம் மோடி ஆட்சிக்கு வந்தார், ஆனால் அவர் சார்ந்துள்ள இந்து தேசியவாத பாஜக நாட்டின் பன்மைத்துவத்தை நிராகரித்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து செயல்படுகிறது. அதேபோல் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை தொற்றுநோயை காரணம்காட்டி அடக்கியது, இதனால் உலகின் மிக துடிப்பான ஜனநாயகம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என அவர் பாஜகவையும், மோடியையும் சரமாரியாக விமர்சித்துள்ளார். அதேபோல் இந்த பட்டியலில், இந்தியாவில் செல்வாக்குமிக்க ஒரே இந்திய நடிகர் என ஆயுஷ்மான் குரானா இடம்பெற்றுள்ளார். அவரைப் பற்றி அந்த நாளிதழ் மிக சிறப்பாக எழுதியுள்ளது. அவர் மறக்க முடியாத பல படங்களை வழங்கியுள்ளார் எனவும் கூறியுள்ளது. அதேபோல் டெல்லியின் ஷாஹின்பாக் நகரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட 82 வயதான பில்கிஸ் பானு ஷாஹின்பாக் பாட்டியும் அதில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்தியரும், இந்தியாவிலிருந்து வந்து அமெரிக்காவில் பணிபுரிபவரும் மற்றும் ஒரு ட்ரில்லியன் டாலர் ஊதியம் பெரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை உயர்ந்தது வரை அவரது வாழ்க்கை வரலாறு குறிப்பை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் சுந்தர் பிச்சையின் சிறப்புகளை அது தொகுத்து வழங்கியுள்ளது. அவர் மிகவும் இயல்பானவர் என்றும், சுந்தர் பிச்சையை டைம்ஸ் வர்ணித்துள்ளது. டைம்ஸ் வெளியிட்டுள்ள நூறு பிரபலங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய 10 நபர்களின் பெயர்கள் பின்வருமாறு:-
நரேந்திர மோடி, (பிரதமர்) டொனால்ட் டிரம்ப், (அமெரிக்க அதிபர்) ஜோ பிடன், (அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்) கமலா ஹாரிஸ், (அமெரிக்காவின் துணை ஜனாதிபதி வேட்பாளர்) நான்சி பெலோசி, (அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர்) ஜி-ஜின்பிங், (சீனாவின் ஜனாதிபதி) ஜப்பானின் டென்னிஸ் வீரர் நவோமி ஒசாகா, கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை. ஆயுஷ்மான் குரானா, நடிகர் ரவீந்திர குப்தா, (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியர்) ஆகியோர் ஆவர்.