அமெரிக்காவில் உள்ள பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த இந்திய என்ஜினியர் ஒருவரை அந்நாட்டைச் சேர்ந்த இன வெறியன் ஒருவன், எங்கள் நாட்டை விட்டு வெளியேறு கூச்சலிட்டவாறு சுட்டுக் கொன்றான்.

அமெரிக்காவின் கென்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்பவர் அதே பகுதியில் உள்ள மதுபான விடுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்ருந்தார்.

அப்போது அங்கிருந்த ஒருவன், திடீரென தனது கைத்துப்பாக்கியை உருவி அருகில் இருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூவியபடி அவன் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் ஸ்ரீனிவாஸ் என்ற என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

அவரை காப்பாற்ற முயன்ற சகப் பணியாளரான அலோக் மடசனி என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையடுத்து தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். அப்போது கிளின்டன் என்ற பாரில் அவன் மது அருந்தியதும் அங்கிருந்த பார் டென்டரிடம் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த 2 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுககுறித்து பார் டென்டர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த நபர் ஆஸ்டின் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் ஆடம் புரின்டன் என்பதும் தெரிய வந்துள்ளது.

இஸ்லாமியர்கள் என நினைத்து அவன் இந்தியர்கள் 2 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.