பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துருக்கி அதிபர் எர்டோகன் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது  ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  நீக்கிய மத்திய அரசு, அதை முழுவதுமாக இந்தியாவுடன் இணைத்துக்  கொண்டது .  இந்தியாவின்  நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததுடன்,   இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.  காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது செல்லாது ,    காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை இந்தியா பறித்து விட்டது ,  என பாகிஸ்தான் சர்வதேச அளவில்  பிரசாரம் செய்து வருகிறது .

 

இந்நிலையில் துருக்கி அதிபர்ரீசெப் தயீப் எர்டோகன்  இரண்டு  நாள்  பயணமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் . பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்த அவர்,   காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின்  நிலைபாட்டிற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.   கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்  சிறப்பு  அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது ,   எங்கள் பாசமிகு காஷ்மீர் சகோதர சகோதரிகள் பல  ஆண்டுகளாக அசௌகரியமான சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ள   ஒருதலைப்பட்சமான  நடவடிக்கைகளால் காஷ்மீர் மக்களின்  துன்பம் துயரம் நீடித்து வருகிறது. என எர்டோகன்  கருத்து கூறியிருந்த நிலையில் , தற்போது  பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதாக குரல் கொடுத்துள்ளார் . 

இந்நிலையில் பிரதமர்  இம்ரான்கானை  சந்தித்த அவர்,   காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் துருக்கி நீதி ,  அமைதி ,  மற்றும் பேச்சுவார்த்தையில்,  தொடர்ந்து துணைநிற்கும் என தெரிவித்துள்ளார் . இந்நிலையில்  எர்டோகனின்  இந்த  கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது.  காஷ்மீர் விவகாரம் குறித்து துருக்கி அதிபர் தெரிவித்துள்ள கருத்தை முற்றிலுமாக இந்தியா நிராகரித்தது  எனவும்,    ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அழிக்க முடியாத பகுதி என்றும் ,  தேவையில்லாமல் இந்தியாவின் உள்விவகாரங்களில் துருக்கி  தலையிட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.  அத்துடன்,   பாகிஸ்தானிலிருந்து  இந்தியாவிற்கும் அதன் பிராந்தியத்திற்கு பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தல் உள்ளிட்ட உண்மைகளைப் பற்றிய சரியான புரிதலை வளர்த்துக் கொள்ளவும்  துருக்கி அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுக்கிறது என தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஐநாவில் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஏர்டோகன் ,  ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிராக உரையாற்றினார்,  அதற்கு ஏற்கனவே இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்த நிலையில் ,  காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் அதில் துருக்கி தலையிட தேவையில்லை  என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது .