எல்லா சூழல்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இந்திய படைகளுக்கு உள்ளது..!! முன்னாள் ராணுவத்தளபதி அதிரடி..!!
எல்லாச் சூழ்நிலைகளையும் எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும். இந்திய ராணுவம் எல்லாவற்றையும் சந்திக்கும் ஆற்றல் கொண்டது என விகே சிங் கூறியுள்ளார்
பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு இருந்துவரும் நிலையில், இந்திய எல்லைக்குள் நுழையும் துணிவு எந்த அண்டை நாட்டுக்கும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சீனாவை எச்சரித்துள்ளார். இதே கருத்தை முன்னாள் ராணுவ தளபதியும் மத்திய அமைச்சருமான ஜெனரல் வி.கே சிங் கூறியுள்ளார். உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கொரோனாவுடன் சேர்த்து சீனா, பாகிஸ்தான் போன்ற எதிரிகளிடமிருந்தும் நாட்டைக் காக்க போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் பல்வேறு வகையில் எல்லையில் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் செயல்பட்டுவரும் இவ்விரு நாடுகளும் கூட்டணி அமைத்து இந்தியாவை எதிர்த்து வரும் நிலையில், தற்போது சீனா கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி விட்டதாக ஒரு பொய்யை கூறி உள்ளது.
அது மட்டுமின்றி அங்கு ஏராளமான படைகளை குவித்து இந்தியாவை எதிர்க்க துணிந்துள்ளது. அதாவது கடந்த மே 5 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பாங்கொங் த்சோ மற்றும் சிக்கிமின் நகுலா-பாஸ் பகுதிகளில் இந்திய-சீன படையினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சீனா இந்தியாவுக்கு எதிராக படைகளை குவித்து வருகிறது. இந்நிலையில் போருக்கு தயாராகும்படி தனது ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார் அதிபர் ஜி ஜின்பிங், இதனால் சீனா எல்லையில் தன் படைகளை வேகமாக குவித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத், ராணுவ தலைவர் ஜெனரல் எம்.எம் நாரவனே, மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய மோடி ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். எல்லா சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருக்கும்படியும் இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து கிட்டதட்ட 20 நாட்கள் ஆகியுள்ள நிலையில் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஆனாலும் சீன ராணுவத்தில் இருந்து எந்த அசாதாரண நடவடிக்கைகளும் தென்படவில்லை, இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , மோடி தலைமையிலான இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு , எந்த ஒரு அண்டை நாட்டுக்கும் துணிச்சல் இல்லை என ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார். அதே போல் மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜெனரல் வி.கே சிங் இதே கருத்தை கூறியுள்ளார், மேலும் தெரிவித்துள்ள அவர், சீனா அடிக்கடி எல்லை மீறி வருகிறது, கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலகம் முழுவதும் சீனாவை குற்றம்சாட்டி வரும் நிலையில், அந்த நெருக்கடியிலும், குழப்பத்திலும் உள்ள சீனா இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சில நேரங்களில் திடீரென இந்திய எல்லைக்குள் ஊடுருவி இது தங்களுடையது என கூறிவருகிறது.
இது சீனாவின் நாடு பிடிக்கும் மனோபாவத்தை காட்டுகிறது, கொரோனா காரணமாக சீனா ஒரு மோசமான சூழ்நிலையில் சிக்கி உள்ளது. உலகமே அவர்களை அவதூறாக பேசுகிறது, எனவே அதை திசை திருப்ப அவர்கள் விரும்புவதால் தற்போது இந்தியா மீது கொடூர சுயநல அரசியல் நாடகத்தை அரங்கேற்ற துடிக்கின்றனர், ஆனால் அதற்கு இது 1962 அல்ல இது 2020 இப்போது காட்சிகள் முற்றிலும் வேறுபட்டது. எல்லாச் சூழ்நிலைகளையும் எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும். இந்திய ராணுவம் எல்லாவற்றையும் சந்திக்கும் ஆற்றல் கொண்டது என விகே சிங் கூறியுள்ளார்.