கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் கர்னல் சந்தோஷ்குமார் தலைமையில் சீனபடையுடன் சண்டையிட்டு 20 ராணுவ  வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும்  அவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டும், கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டு பின்னர் அவர்கள் உயிரிழந்திருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுகுறித்து ஜூன் 17 அன்று பேசிய இந்திய பிரதமர் மோடி எங்கள் வீரர்கள் வீரத்துடன் போராடி சீனர்களுக்கு பல உயிர் இழப்புகளை ஏற்படுத்தியதுடன், எங்கள் வீரர்கள் நாட்டின் மண்ணை காக்க சண்டையிட்டு இறந்துவிட்டார்கள் என்ற  செய்தியால் தேசம் பெருமிதம் கொள்கிறது எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய வீரர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதில் இரண்டு படைகளுக்கும் இடையே மோதல் நடந்த இடம் ஒரு செங்குத்தான மலைப்பகுதி என்பதால், அங்கே நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு இடையே மோதல் பல மணிநேரம் நீடித்தது என்றும்,  அது சரிவான மலைப்பகுதி என்பதால் இந்திய வீரர்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக்கொண்டு சீனர்களை எதிர்த்து அந்த போரில் சண்டையிட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நள்ளிரவில் மோதல் உக்கிரமானதையடுத்து இரண்டு தரப்பு ராணுவ வீரர்களும் மலை உச்சிகளில் இருந்தது கீழே விழுந்ததாகவும், அதில் பல இந்திய வீரர்கள் மலையையொட்டியுள்ள ஆற்று பகுதியில் விழுந்து நீரில் மூழ்கியதுடன், சிலர் கடும் குளிரால் இறந்தனர் எனவும் கூறப்படுகிறது. வீரமரணமடைந்த நம் வீரர்களின்  உடல் நிலையிலிருந்து அவர்கள் கடுமையான  போரில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் இந்திய வீரர்கள் பல சீன ராணுவத்தினரை கொன்றதும் அவர்களின் கூடாரங்களை அடித்து துவம்சம் செய்ததும் தெரியவந்துள்ளது. கூர்மையான ஆயுதங்களால் இந்திய வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றில் பலருக்கு மூட்டு எலும்பு முறிவுகளும் இருந்தன என்றும் லேவின் சோனம் நூர்பூ மெமோரியல் எஸ்.என்.எம் மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட காயமுற்ற வீரர்களுடன் உரையாடியதில் இந்திய வீரர்கள் தங்கள் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபு தாக்கப்பட்டதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததும், பின்னர் அங்கு கடுமையான மோதலில்  ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 18-ஆம் தேதி அன்று பிளான்ட் லேப்ஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் உள்ள லடாக் பிராந்தியத்திலுள்ள கல்வான் நதி பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படையினருக்கிடையே ஒரு பயங்கர மோதல் நடந்ததை அது காட்டுகிறது. தங்கள் கர்னல் மற்றும் பேச்சுவார்த்தைக்கு சென்ற 2 வீரர்கள் தாக்கப்பட்ட பின்னர் இந்திய கூடுதல் படை வீரர்கள் ஆக்ரோஷத்துடன் சீன எல்லைக்குள் நுழைந்ததும் பின்னர் இந்திய வீரர்கள் முழு பலத்துடன் தாக்குதலை நடத்தியதும் மருத்துவமனையில் சிக்ச்சை பெற்றுவரும் வீரர்களின் வாயிலாக கசிந்துள்ளது.