கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது இந்தியா..!! நாட்டு மக்கள் அதிர்ச்சி..!!
கொரோனா வைரஸ் மற்றும் அதன் தீவிர பரவல் கடந்த சில மாதங்களாக உலகை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. அதாவது துவக்க காலத்தில் இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று மிக மெதுவாகப் பரவியது, ஒரு லட்சம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட சுமார் 110 நாட்கள் ஆனது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் நிலைமை மிகவும் ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளது. இதன் மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்த பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் 90,802 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தகவலால் உலக நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சுமார் 200க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கிட்டத்தட்ட 2.73 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பெரு, உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியா தற்போது வைரஸ் தொற்றின் மையமாகவே மாறியுள்ளது.
நாளொன்றுக்கு சராசரியாக 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை நோய் தொற்று பதிவாகி வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 102 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் மூலம் நாட்டில் மொத்தம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,04,613 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 69 ஆயிரத்து 664 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,50,429 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1016 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71,642 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் தீவிர பரவல் கடந்த சில மாதங்களாக உலகை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. அதாவது துவக்க காலத்தில் இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று மிக மெதுவாகப் பரவியது, ஒரு லட்சம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட சுமார் 110 நாட்கள் ஆனது. ஆனால் அதன் பின்னர் நோய் பரவலின் வேகம் பன்மடங்கு உயர்ந்ததால், தற்போது வெறும் இரண்டே நாட்களில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. மொத்தம் 221 நாட்களில் சுமார் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் 77.30 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் 1.70 சதவீதமாக உள்ளது. அதாவது இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,20,362 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 49,55,1,507 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நாட்டில் சோதனை அதிகரித்துள்ளதால், நோய்த்தொற்று விகிதமும் அதிகமாக பதிவாகி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.