எல்லையை காக்க அதிநவீன காலாட்படை போர் வாகனங்கள்..!! ராஜ்நாத் சிங் அதிரடி சரவெடி..!!
அதன் ஓரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட சுமார் 156 பி.எம்.பி காலாட்படை போர் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில், இந்தியா தனது பாதுகாப்பு திறனை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. அதன் கீழ், மேம்படுத்தப்பட்ட 156 பி.எம்.பி காலாட்படை போர் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமையன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். " மேக் இன் இந்தியா" திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், காலாட்படை போர் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை வாரியத்திடம்(OFB) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த மே-5ஆம் தேதி இந்திய- சீன எல்லையான பாங்கொங் த்சோ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன பாதுகாப்பு படையினருக்கும், பாதுகாப்பு பணியில் நின்றிருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இரண்டு தரப்பிலும் 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து சிக்கிமை ஒட்டியுள்ளனர் நகுலா பாஸ் பகுதியில் இதே போன்ற ஒரு பிரச்சனையில் 250க்கும் மேற்பட்ட இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இரும்புகம்பி, தடி போன்ற ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இருதரப்பிலும் ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தையடுத்து இருதரப்பிலும் லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில், பிரச்சனை தணிந்தது. அதைத் தொடர்ந்து மே- 22ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவம், சீனாவுக்கு சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து குடில்களை அமைத்ததாக குற்றம்சாட்டிய சீனா, அப்பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்களை குவிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் தனது படைகளை குவித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் இன்னும் அங்கு பதற்றம் தணியவில்லை, இருதரப்பிலும் ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆசியாவின் அதிவல்லமை படைத்த இரண்டு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா-சீனா இடையே போர் மூண்டால் அதை எதிர் கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. அதன் ஓரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட சுமார் 156 பி.எம்.பி காலாட்படை போர் வாகனங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் இந்திய ராணுவத்தில் இணைந்த பிறகு ஃபயர்பவரை கணிசமாக அதிகரிக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் , மேம்பட்ட வசதிகளுடன் கூடிய பி.எம்.பி 2/2 கே காலாட்படை போர் வாகனங்கள், தெலுங்கானாவில் உள்ள மேடக் ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்றும், இவற்றின் கட்டுமானத்திற்கு சுமார் 1,094 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாகனம் பி.எம்.பி 2/2 கே, 285 குதிரைத்திறன் கொண்ட இயந்திரத்தால் இயக்கப்படும்.எடை குறைவாக இருப்பதால், இந்த வாகனம் போர்க்களத்தில் அதிவேகத்தில் இயக்கவும் எளிதில் பராமரிக்கவும் முடியும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனங்களின் உதவியுடன், அடிப்படை போர் தேவைகளை மிகக் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றும், மலைப் பகுதிகள் மற்றும் மோசமான மணல் நிறைந்த பகுதிகளில் கூட இந்த வாகனத்தை மணிக்கு 65 கிமீ வேகத்தில் இயக்க முடியும். இது தவிர, மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நீர் வழியாக செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தை 35 கிமீ வேகத்தில் குறுக்கு தடைகள் மற்றும் சரிவான பகுதிகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்கமுடியும் என்றும், இந்த காலாட்படை போர் வாகனங்கள் 2023 க்குள் தயாராகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.