இந்தியா - மாலத்தீவு பிரச்சனை.. சீனாவிடம் கோரிக்கை வைக்கும் அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்சு - என்ன தெரியுமா?
India Maldives Issue : இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்த இனவெறி கருத்துக்கு பிறகு சில மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே ஒரு மோதல் போக்கு நிலவியது.
இந்த சூழலில் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, தனது நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாரத பிரதமருக்கு எதிராக தனது அமைச்சர்களின் இழிவான கருத்துக்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியில் மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து இந்திய சுற்றுலாப் பயணிகளின் மாலத்தீவுக்கான தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்து வருகின்றனர்.
சீனாவுக்கான தனது ஐந்து நாள் அரசுமுறைப் பயணத்தின் இரண்டாவது நாளில், இன்று ஜனவரி 9ம் தேதி செவ்வாயன்று, புஜியான் மாகாணத்தில் மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் முய்ஸு தனது உரையில், சீனாவை தீவு நாட்டின் "நெருங்கிய" நட்பு நாடு என்று குறிப்பிட்டார். மேலும் "சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடுகள் மற்றும் வளர்ச்சி பங்காளிகளில் ஒன்றாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.
2014 ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் தொடங்கப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டங்களைப் பாராட்டிய அவர், "மாலத்தீவு வரலாற்றில் காணப்பட்ட மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை அவை வழங்கியுள்ளன" என்று புகழாரம் சூட்டினார்.கூறினார். மாலத்தீவுக்கு தனது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க சீனாவை அவர் வலியுறுத்தினார்.
"சீனா எங்கள் (மாலத்தீவுகளின்) சந்தையில் கோவிட்-க்கு முந்தைய காலத்தில் முதலிடத்தில் இருந்தது, மேலும் சீனா இந்த நிலையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை நாங்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" என்று அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு தெரிவிக்கிறது.
மேலும், இந்து சமுத்திர தீவில் ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கான 50 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளதாக மாலத்தீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்தின் போது ஒரு அழகிய கடற்கரையில் அவரது வீடியோவை வெளியிட்ட பின்னர், சில மாலத்தீவு அமைச்சர்கள் அவருக்கு எதிராக இழிவான கருத்துக்களை பேசினார்.
சமூக ஊடகங்களில் இழிவான பதிவுகள் செய்ததற்காக மூன்று துணை அமைச்சர்களை முய்சுவின் அரசாங்கம் இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
2023 தான் பூமியின் மிக வெப்பமான ஆண்டு! 1.5 செல்சியஸ் வரம்பை நெருங்கும் புவி வெப்பம்!