இந்தியாவைப் போல அமெரிக்காவும் சீனாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, ட்ரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த 24 எம்பிக்கள் அவருக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் இந்தியாவைப் போல தைரியமாக, சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையில் இறங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக  பனிப்போர் நீடித்து வருகிறது. பின்னர் கொரோனா விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் வெளிப்படையான பகையாக மாறியுள்ளது.  கொரோனா வைரஸால் மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்காவே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் தனது ஒட்டுமொத்த கோபத்தையும் சீனா மீது வெளிப்படுத்தி வருகிறார். கொரோனா வைரசுக்கு சீனா தான் காரணம் என்றும், இந்த வைரஸை திட்டமிட்டே சீனா பரப்பியது என்றும் அவர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். 

அதுமட்டுமல்லமால், தென்சீனக்கடல், ஹாங்காங் மற்றும் தைவான் போன்ற இடங்களில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் அமெரிக்கா முழங்கி வருகிறது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே எப்போதும் இல்லாத அளவுக்கு மோதல் வலுத்துள்ளது. சீன மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிக்க தடை ,சீன விமானங்களுக்கு அமெரிக்காவில் பறக்க தடை, இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட வர்த்தக உடன்பாட்டில் தொய்வு என சீனா-அமெரிக்கா இடையே மோதல் நாளுக்நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் செய்தியாளரிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,  சீனா உலகத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. தென்சீனக்கடல் தொடங்கிய கிழக்கு லடாக் வரை சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே விரைவில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார். 

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ,  சீனா மீது எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து அதிபர் விரைவில் அறிவிப்பார் என கூறியுள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த 24 எம்.பிக்கள். அதிபருக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளனர். அதில், சீன பயன்பாடுகள் உடனடியாக அமெரிக்காவில் தடைசெய்யப்பட வேண்டும். இந்தியா ஏற்கனவே சீனாவின் செயலிகளுக்கு தடை விதித்து சிறந்த வழிகாட்டுதலை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அமெரிக்காவும் அவ்வாரே செய்ய வேண்டும்.  தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இந்தியா, சீனாவின் 60 செயலிகளை அதிரடியாக தடை செய்துள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய முன்னெடுப்பாகும். அதேபோல அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும் சீன மொபைல் பயன்பாடுகள் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. எனவே இந்தியாவைப் போல அமெரிக்காவும் சீன செயலிகள் மற்றும் மொபைல்களை தடை செய்ய வேண்டும்.  சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது செயலிகள் மூலம் அமெரிக்காவில் ஊடுருவி வருகிறது.  

குறிப்பாக டிக்டேக் போன்ற பிரபலமான செயலிகளின் மூலம் அமெரிக்காவிலிருந்து பல்வேறு தகவல்களை சீனா சேகரித்து வருகிறது, பின்னர் அதை அதன் நலனுக்கு அது பயன்படுத்துகிறது. எனவே  அமெரிக்கா உடனே  நாட்டின் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். சீனாவின் செயலிகள் மற்றும் மொபைல் போன்களை  தடை செய்ய வேண்டும். இது அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிறுவனங்களின் நலன்களை முழுமையாக பாதுகாக்க வேண்டிய நேரம் . எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எதிராக கடுமையான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள குடியரசு கட்சியின் எம்.பிக்களில் ஒருவரான கேரி லுக் சீனா இப்போது அமெரிக்க குடிமக்களின் தகவல்களை அச்சமின்றி சேகரித்து வருகிறது, எதிர்காலத்தில் இதன் விளைவுகளை அமெரிக்கா நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.