மேலும் அண்டை நாடான இந்தியாவிடமும் இலங்கை மருத்துவ உதவிகளை கேட்டிருந்தது. 

உலக நாடுகளையே உலுக்கு எடுக்கும் கொரோனா வைரஸ் நமது அண்டை நாடான இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை அங்கு கொரோனா வைரஸால் 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. குட்டி நாடான இலங்கை கொரோனாவின் கொடூர தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தது. 

இந்நிலையில் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்தியா. தற்போது இலங்கையில் உள்ள மருத்துவ கட்டமைப்பைக் கொண்டு சுமார் 2 ஆயிரம் கொரோனா நோயாளிக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். இதனால் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. 

மேலும் அண்டை நாடான இந்தியாவிடமும் இலங்கை மருத்துவ உதவிகளை கேட்டிருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நட்பு நாடுகளுக்கு இந்தியா தனது நேச கரங்களை நீட்டி வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ பொருட்கள் ஏற்றுமதி மீதான தடையை நீக்கி சீனாவிற்கு உதவியது. தற்போது அமெரிக்க அதிபரின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 

Scroll to load tweet…

அந்த வரிசையில் இலங்கையின் கோரிக்கைக்கு செவி சாய்த்த இந்தியா, நமது நாட்டிற்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் 10 டன் மருந்து பொருட்களை இலங்கையில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதனை புகைப்படத்துடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே, நெருக்கடி நேரத்திலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு உதவி வரும் இந்திய பிரதமர் மோடி அவர்களையும், இந்திய மக்களையும் பாராட்டியுள்ளார்.