சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கக்கூடிய கந்தக-டை-ஆக்ஸைடை அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டைவிட தற்போது 50% கந்தக-டை-ஆக்ஸைடு அதிகமாக வெளியேற்றப்படுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் அதிகளவில் கந்தக-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவதில் முதலிடத்தில் சீனா இருந்தது. ஆனால், தற்போது சீனாவில் கந்தக-டை-ஆக்ஸைடின் வெளியேற்றம் 75% குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கந்தக-டை-ஆக்ஸைடின் வெளியேற்றம் 50% அதிகரித்து தற்போது, காற்று மாசுபாட்டில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
உலகளவில் நிலக்கரியை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. நிலக்கரியின் மொத்த எடையில், 3% கந்தகம் உள்ளதால் அதைப்பயன்படுத்துவதால், இந்தியாவில் காற்று கடுமையாக மாசடைகிறது.
கந்தக-டை-ஆக்ஸைடு நச்சு காரணமாக இந்தியாவிலும் சீனாவிலும் மக்களின் ஆயுட்காலம் வெகுவாக குறைவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 3 கோடியே 30 லட்சம் பேரும் சீனாவில் 9 கோடியே 90 லட்சம் பேரும் கந்தக-டை-ஆக்ஸைடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே கந்தக-டை-ஆக்ஸைடின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலையும் மக்களையும் காக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது.