பகைக்கு மத்தியிலும் அமெரிக்காவை அவமானப்படுத்திய இந்தியா-சீனா..!! வாண்டடாக வந்து அசிங்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்
எல்லையில் சீனாவிற்கும்-இந்தியாவிற்கும் இடையேயான தகவல் தொடர்பு நல்ல முறையில் இருந்து வருகிறது என ட்ரம்பின் அறிவிப்புக்கு அவர் பதிலளித்துள்ளார்
இந்தியா-சீனாவுக்கு இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர, மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மூன்றாவது நாடு தேவையில்லை என அமெரிக்காவின் அறிவிப்பை இரு நாடுகளும் புறக்கணித்துள்ளன. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய-சீன எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த மே-5 மற்றும் 6ஆம் தேதி பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து மே 9-ஆம் தேதி சிக்கிமில் உள்ள நகுலா பாஸ் பகுதியில் இருதரப்பிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் இரும்பு கம்பிகளாலும், தடிகளாலும் தாக்கிக் கொண்டனர். மேலும், ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்துக் கொண்டதில் இருதரப்பிலும் வீரர்கள் படுகாயமடைந்தனர்.
22 ஆம் தேதி கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா எல்லைத் தாண்டியதாக கூறி, சீனா அந்த பகுதியில் ஏராளமான படைகளை குவித்து வருகிறது. பதிலுக்கு இந்தியாவும் தனது படைகளை குவித்து சீனாவை கண்காணித்து வரும் நிலையில், வழக்கத்துக்கு மாறாக இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆசியாவின் ஜாம்பவான்களான இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க, மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது என அறிவித்துள்ளார். ஆனாலும் ட்ரம்பின் இந்த அறிவிப்பை இரு நாடுகளும் புறக்கணித்துள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், தற்போதைய ராணுவ நிலைப்பாட்டை தீர்க்க மூன்றாம் தரப்பினரின் தலையீட்டை இருநாடுகளும் விரும்பவில்லை, எல்லையில் சீனாவிற்கும்-இந்தியாவிற்கும் இடையேயான தகவல் தொடர்பு நல்ல முறையில் இருந்து வருகிறது என ட்ரம்பின் அறிவிப்புக்கு அவர் பதிலளித்துள்ளார். மேலும் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், உரையாடல் மற்றும் ஆலோசனைகள் மூலம் எங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள இருநாடுகளுக்கும் ஆற்றல் இருக்கிறது.
எனவே மூன்றாம் தரப்பின் தலையீடு எங்களுக்கு தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இது குறித்து தெரிவித்துள்ள இந்தியா, எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அமைதியாக தீர்க்க சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா ஆன்லைனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சீனாவுடன் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் முன் வந்தார், ஆனால் அதை இந்தியா நிராகரித்த நிலையில் ஸ்ரீவாஸ்தவா இவ்வாறு கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை (இன்று) செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் "சீனா-இந்தியா எல்லை குறித்த கேள்விக்கு, சீனாவின் நிலைப்பாடு நிலையானது. மற்றும் தெளிவானது" என்றார். " இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்துக்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், இருதரப்பு ஒப்பந்தங்களை அவதானிக்கிறோம் மற்றும் எல்லைப் பகுதியில் பிராந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்க இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளோம்" என்று ஜாவோ கூறினார்.