நித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதுகுறித்து ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடத்தல், பாலியல் வழக்குகளில் குஜராத் மற்றும் கர்நாடாக போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்வதற்காக சர்வதேச போலீசாரின் (இன்டர்போல்) உதவியை குஜராத் போலீசார் நாடினர். அதன்பேரில் நித்யானந்தா எந்த நாட்டில் பதுங்கி இருக்கிறார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச போலீசார் புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள நித்யானந்தா புதிய பாஸ்போர்ட் பெற்று கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதை போலீஸ் அதிகாரிகள் யாரும் உறுதிபடுத்தவில்லை. இந்நிலையில் பசிபிக் தீவு நாடான வனுவாட்டு என்ற குட்டித்தீவில் உள்ள வங்கிக் கணக்கில் தனது பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரு சிறப்பு பூஜைக்காக கட்டணம் செலுத்துவது தொடர்பான விவரங்களை பக்தர் ஒருவர் தேடியபோது நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரியவர் அனுப்பிய இ-மெயிலில், வனுவாட்டு தீவில் உள்ள வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. வனுவாட்டு தேசிய வங்கியின் போர்ட் விலா கிளையில் ‘கைலாசா லிமிடெட்’என்ற பெயரில் அந்த வங்கிக்கணக்கு உள்ளது.

நித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவு ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு பசிபிக்கடலில் அமைந்துள்ளது. வரிகள் இல்லாத சிறிய நாடுகளில் ஒன்றான வனுவாட்டில் யார் வேண்டுமானாலும் வங்கிக்கணக்கை தொடங்கலாம். இந்நாட்டின் தேசிய வங்கியில் முதலீடு செய்தால் வருமான வரி, கார்ப்பரேட் வரி, சொத்து வரி, வருவாய் மூல நிதி வரி என எந்த வரியும் செலுத்த வேண்டியது இல்லை. வங்கியில் கணக்கு தொடங்கும் நபர்கள் குறித்த விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும். இதுபோன்ற காரணங்களாலேயே நித்யானந்தா இந்த நாட்டில் வங்கிக்கணக்கை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த குஜராத் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்ததும், நீதிமன்ற உத்தரவு பெற்று ‘ரெட் கார்னர்’நோட்டீஸ் பிறப்பித்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்..