இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை, பிரதமர் நவாஸ் செரீப் பாகிஸ்தானில் நிறைவேற்றி வருவதாக இம்ரான் கான் குற்றம்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளார். இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் ‘தெக்ரிக் இ இன்சாப்’ கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, நாளை முதல் இஸ்லாமாபாத்தில் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக இம்ரான் கான் அறிவித்திருந்தார். இந்நிலையில், இம்ரான் கான் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த, அக்கட்சியை சேர்ந்த 100 தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரத்தில் இம்ரான்கான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பேசிய அவர், “ பிரதமர் நவாஸ் செரீப், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமாக இருந்து, அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார். மோடியின் எண்ணங்களையும், விருப்பங்களையும் பாகிஸ்தானில் பிரதமராக இருந்து கொண்டு நவாஸ் ஷெரீப் செயல்படுத்தி வருகிறார்.
இதற்கு சான்றாக, கடந்த மே மாதம் லண்டனில் இருதய ஆபரேசனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப், அந்த தகவலை மோடியிடம் முதலில் பகிர்ந்து கொண்டார். தனது தாயாருக்குக் கூட முதலில் தெரிவிக்கவில்லை . தீவிரவாதிகள் குறித்து, ராணுவத்துக்கும் அரசுக்கும் இடையேயான முரண்பாடு குறித்த தகவல்கள், நவாஸ் செரீப்பின் ஒப்புதலுடன்தான் கசிந்துள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.
