நான் அமெரிக்க ஜனாதிபதியானால் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாத செயல்கள்  பொறுத்துக் கொள்ளப்படாது என்றும் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்  ஜனநாயகக் கட்சி சார்பில்  வேட்பாளராக களமிறங்கும் ஜோ பிடன் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய  வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த பேரிடருக்கு மத்தியிலும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ளது. வருகிற நவம்பர்-3 ஆம் தேதி அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில்  ஜனாதிபதியாக மீண்டும் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறமிருந்தாலும் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அந்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தின விழா நேற்றுமுன்தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. 

அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர், இதில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுடன் சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு முன்னிலையில் இருந்து நான்தான் பணியாற்றினேன். அப்போது நான், இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகளாக மாறினால், கூட்டாளிகளாக இருந்தால், இந்த உலகம் பாதுகாப்பானதாக மாறும் என்றேன். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், இந்த வார்த்தையை நான் தொடர்ந்து நம்புவேன். இந்தியா தற்போது எல்லையில் சந்தித்துவரும் பிரச்சினைகளிலும், அச்சுறுத்தல்களிலும், அந்நாட்டிற்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும், பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்போம். இரு நாடுகளிலும் ஜனநாயகம் வலு பெறுவதற்கு உழைப்போம் என்றார். 

அதேபோல் ஜனநாயக கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை அறிக்கையில், தெற்காசியாவில் எல்லையில் நிகழும் பயங்கரவாத நடவடிக்கைகள் பொறுத்துக்கொள்ளப்படாது என பாகிஸ்தானின் பெயர் குறிப்பிடப்படாமல் எச்சரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஒபாமாவின் காலம்தொட்டு, தற்போது ட்ரம்ப் வரையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜோ பிடன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த எச்சரிக்கை சீனாவுக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.