தூய்மை இந்தியா திட்டத்தில் மனித உரிமை மீறல்.. ஐநா பிரதிநிதி பகிரங்க குற்றச்சாட்டு..!
தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் மனித உரிமை மீறப்படுவதாக ஐநா பிரதிநிதி ஹெல்லர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஐநாவின் பாதுகாப்பான குடிநீர் மற்றும் தூய்மை தொடர்பான மனித உரிமைகள் பிரிவின் பிரதிநிதி லியோ ஹெல்லர் பேசியதாவது:
நான் இந்தியாவின் கிராமங்கள், நகரங்கள், குடிசைப்பகுதிகள் என பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்த்தேன். அங்கு பல இடங்களில், மகாத்மா காந்தி படத்துடன் தூய்மை இந்தியா திட்டத்தின் பிரச்சார பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
தூய்மை இந்தியா திட்டம் சிறப்பானதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மனிதநேயத்துடன் நடப்பதை விட போலீஸ் பாணியில் நடப்பதுதான் அதிகமாக உள்ளது. கழிவறைகள் முக்கியம்தான். அதேநேரத்தில் தூய்மையான பாதுகாப்பான குடிநீர் வழங்குவதும் முக்கியம். கழிவறைகள் கட்டாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது. இதுவும் மனித உரிமை மீறலே என ஹெல்லர் கடுமையாக சாடியுள்ளார்.
ஹெல்லரின் இந்த பேச்சுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் மனித உரிமை மீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேம்போக்காக பார்த்துவிட்டு யாரும் விமர்சிக்கக்கூடாது என தூய்மை இந்தியா திட்ட உயரதிகாரி தெரிவித்துள்ளார்.