அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார், உங்களுக்கு தெரியாதா ? எனக்கூறி, இனிப்பு வழங்கி இந்து சேனா அமைப்பினர்டெல்லியில் நேற்று கொண்டாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு தடை கொண்டு வர வேண்டும், இந்து மதம் தனக்கு பிடிக்கும் என எப்போது டிரம்ப் கூறினாரோ அப்போதே அவர் வென்றுவிட்டார் என இந்து சேனா அமைப்பினர் தெரிவித்தனர். 

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 8-ந்தேதி நடக்க உள்ளது. இதில் அதிபர் வேட்பாளர்களாக ஆளும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். 

அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடைவிதிக்க வேண்டும், மெக்சிக்கோ எல்லையில் அகதிகள் நுழையா வகையில், சுவர் எழுப்ப வேண்டும் என்ற சர்ச்சைப் பேச்சுகளால் எதிர்மறையான புகழை டிரம்ப் பெற்று வருகிறார். 

இதனால், இந்தியாவில் உள்ள இந்து சேனா அமைப்பினர், டிரம்பை புகழ்ந்து பேசி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு, டிரம்ப் பிறந்தநாளை இந்து சேனா அமைப்பினர், கொண்டாடிய நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று டிரம்ப் அதிபர் தேர்தலி்ல் வெற்றி பெறுவார் என முன்கூட்டியை கொண்டாடினர்

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று கூடிய இந்து சேனா அமைப்பினர் டிரம்ப் படத்துக்கு மாலை அணிவித்து, திலகம் இட்டு, இனிப்பு வழங்கினர். 

இது குறித்து இந்துசேனா அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா கூறுகையில், " டிரம்பின் வெற்றி முன்கூட்டியை நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். அவரின் கருத்துக்கள் எப்போது முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்ததோ அப்போதே அவர் வென்றுவிட்டார். மேலும், அவர் இந்தியாவையும், இந்துக்களையும் அதிகமாக நேசிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆதலால் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும் " எனத் தெரிவித்தார். 

மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் டிரம்புக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, " இந்தியா டிரம்பை விரும்புகிறது ", " டிரம்ப்தான் எங்களின் நம்பிக்கை " என்று இந்து சேனா அமைப்பினர் கோஷமிட்டனர். அதன்பின், டிர்ம்பின் புகைப்படத்துக்கு இனிப்பு ஊட்டினர். 

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலும் மதச்சார்பற்றவர்கள் என்பதால், அவர்களின் வாக்கு பெரும்பாலும் ஹிலாரி கிளிண்டனுக்கே இருக்கும் என ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஆதரவு ஹாலாரிக்கா, அல்லது டொனால்ட் டிரம்புக்கான என மத்திய அரசு இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதிபர் ஒபாமாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல சமூகமான உறவு இருந்து வரும் நிலையில்,ஆதரவு குறித்து வாய்திறக்காமல் மத்திய அரசு மவுனம் காக்கிறது.