அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஓதப்பட்ட இந்து மத மந்திரங்கள்.. கொரோனாவிலிருந்து மீள வேண்டி பிரார்த்தனை
கொரோனாவிலிருந்து விடுபட அமெரிக்காவில் நடைபெற்ற பிரார்த்தனையில் இந்து மத வேதங்கள் ஓதப்பட்டன.
கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டிருந்தாலும், மிகக்கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கும் நாடு அமெரிக்கா தான். உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவிற்கே கொரோனா சிம்மசொப்பனமாக திகழ்கிறது.
உலகளவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்கர்கள். அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து 2 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில், உலகிலேயே அதிகபட்சமாக 78 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய வல்லரசு, டெக்னாலஜியில் உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழும் அமெரிக்காவில், கொரோனாவுக்கு எதிராக அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், கடைசியில் கடவுளிடம் சரணாகதியடைந்துள்ளது அமெரிக்கா.
கடவுள் மறுப்பும், குறிப்பாக இந்து மத கடவுள்களையும் வழிபாட்டு முறைகளையும் கிண்டலடிப்பதும் தமிழ்நாட்டில் ஃபேஷனாகி கொண்டிருக்கும் நிலையில், உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், கொரோனாவுக்கு எதிராக பிரார்த்தனை செய்யப்பட்டிருப்பதுடன், அங்கு இந்து மத மந்திரங்கள் ஓதப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், தேசிய பிரார்த்தனை தினத்தையொட்டி, கொரோனாவுக்கு எதிராக பிரார்த்தனை நடந்தது. அந்த பிரார்த்தனையில் இந்து மத யஜூர் வேதங்கள் ஓதப்பட்டன. இந்து அர்ச்சகர்கள் கலந்துகொண்டு இந்து மத மந்திரங்களை ஓதினர்.
அதன்பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், நாட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டுதல்களுக்கும் பிரார்த்தனைகள் துணை புரிவதை நாம் மறுக்க முடியாது. இக்கட்டான இந்த சூழலில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்போம் என்று கூறினார்.
இதே பிரார்த்தனைகள் முதல்வர் பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணி இல்லாமல் பிரார்த்தனை நடத்த கிளம்பிவிட்டார்கள் என்று கிண்டலடிப்பார்கள்; விமர்சித்திருப்பார்கள். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலேயே நடத்தப்பட்டிருக்கும் இந்த பிரார்த்தனையை, அதுவும் அங்கு இந்து மத மந்திரங்கள் ஓதப்பட்டதை பார்த்து, மற்றவர்களின் நம்பிக்கையை நக்கலடிக்கக்கூடாது என்பதை உணரவேண்டும்.