நாட்டின் அதிபராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்க அரசு அரசியலமைப்பு சிக்கலில் சிக்கும். அவர் மீது மின் அஞ்சல் ஊழல் தொடர்பாக நீண்டகால விசாரணை நடத்தப்பட வேண்டும் என குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 8-ந் தேதி நடக்க உள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், இருவரும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

மின்அஞ்சல்

இதில், ஹிலாரி வெறியுறவுத்துறை அமைச்சராக பணியாற்ற போது, அரசு பணிகளுக்கு தனது சொந்த மின் அஞ்சல் முகவரியை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. மேலும், 33 ஆயிரம் மின் அஞ்சல்களை அழித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முன்னர் விசாரணை நடத்திய எப்.பி.ஐ. அமைப்பு, போதுமான ஆதாரங்கள் இல்லை என புகாரை முடித்து வைத்தது.

இந்நிலையில், மீண்டும் அந்த மின்அஞ்சல் குறித்து விசாரணை நடத்தப் போவதாக எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு ஹிலாரிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

விசாரணை

இந்தநிலையில், மிச்சிகன் நகரில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பிரசாரம் நேற்று முன் தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “ தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கையில் ஹிலாரியின் மின் அஞ்சல் ஊழலை விசாரிக்கப் போவதாக எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. ஹிலாரி மீது நீண்டகால அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும்.

ஹிலாரிக்கு ஆதரவாக நீண்டகாலம் இருந்த டக் சோயன் இந்த விவகாரம் தொடர்பாக திடீரென ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார். ஜனநாயகக்கட்சிக்கு ஆதரவாக இருப்பேன், ஹிலாரிக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். ஹிலாரி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தகுதியில்லாதவர்

ஹிலாரி கிளிண்டன் அதிபராக இருக்க தகுதியில்லாதவர்.அந்த பொறுப்புக்கு உகந்தவர் இல்லை. அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்க அரசாங்கம் மிகப்பெரிய அரசியலமைப்பு சிக்கலில் சிக்கும். நாம் அமெரிக்க மக்களுக்காக பணியாற்றுவது அவசியம். ஹிலாரியின் ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். ஜனநாயகத்தை காக்க, அவரை தோல்வியடைச் செய்ய வேண்டும்.

சட்டத்தை மீறுபவர்

ஹிலாரி எப்.பி.ஐ. அமைப்பிடம் பொய் சொல்லியவர் ஹிலாரி. அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது 13 தொலைபேசிகள் மாயமாக மறைந்தன, 33 ஆயிரம் மின் அஞ்சல்கள் அழிக்கப்பட்டன. சட்ட விதிகளை மீண்டும், மீண்டும் மீறி உடைத்து வருபவர் ஹிலாரி கிளிண்டன். ஹிலாரி மூலம் அழிக்கப்பட்ட அவரின் மின் அஞ்சல்கள் நிச்சயம் அழிவைத் தரக்கூடியதாகும்'' என தெரிவித்தார்.