அமெரிக்‍க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனின் சர்ச்சைக்‍குரிய மின்னஞ்சல் விவகாரம், அமெரிக்‍க புலனாய்வுத்துறைக்‍கு பல வாரங்களுக்‍கு முன்பே தெரியும் என அத்துறையின் அதிகாரி திடுக்‍கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இதனிடையே, மேலும் 15 ஆயிரம் மின்னஞ்சல்கள் கண்டறியப்பட்டிருப்பதால், ஹிலரி கிளிண்டனுக்‍கு சிக்‍கல் அதிகரித்துள்ளது.

தனியார் சர்வரை பயன்படுத்தி ஹிலரி கிளிண்டன் அனுப்பிய 33 ஆயிரம் மின்னஞ்சல்கள் மாயமான விவகாரம், அமெரிக்‍க அதிபர் தேர்தலில் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில், ஹிலரி கிளிண்டனின் நெருங்கிய உதவியாளரான Huma Abedin-ன் முன்னாள் கணவர் Anthony Weiner என்பவர், இளம் பெண் ஒருவருக்‍கு மின்னஞ்சல் மூலம் காதல் கடிதம் எழுதியது தொடர்பாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, மாயமாகி விட்டதாக கூறப்படும் ஹிலரி கிளிண்டனின் மின்னஞ்சல்கள் கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அமெரிக்‍க புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தியதோடு, பல வாரங்களுக்‍கு முன்பே இது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்து, அமெரிக்‍க புலனாய்வுத்துறை இயக்‍குநர் James Comey, அதிபர் மாளிகைக்‍கு கடிதம் எழுதியிருப்பதோடு, ஹிலரி கிளிண்டன் மின்னஞ்சல் விவகாரம் குறித்து விசாரிக்‍க போவதாக தெரிவித்துள்ளார். 

இதனிடையே, ஹிலரி கிளிண்டன் தொடர்புடைய மேலும் 15 ஆயிரம் மின்னஞ்சல்களை புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்‍க அதிபர் தேர்தல் வாக்‍குப்பதிவுக்‍கு ஒருவார காலமே உள்ள நிலையில், இந்த மின்னஞ்சல் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளதால், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனுக்‍கு நெருக்‍கடி ஏற்பட்டுள்ளது.