கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போட்ஸ்வானா நாட்டில் 350க்கும் மேற்பட்ட யானைகள் திடீரென்று மரணமடைந்தன. அந்த நாட்டின் ஒக்கவாங்கா சமவெளி பகுதியில் தொடர் மரணங்கள் நடைபெற்றன.

அதன் அருகாமை நாடான ஜிம்பாவேயிலும் யானைகளின் மரணம் நடந்தது. அங்கேயுள்ள ஹவாங்கே தேசிய பூங்காவிற்கும் விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் இது நிகழ்ந்தது. அந்த சமயத்தில் இந்த செய்தி உலகை உலுக்கியது, காட்டுயிர் பாதுகாவலர்கள் மட்டுமல்ல எல்லோரும் இது குறித்து கவலை தெரிவித்தனர். யானைகளின் மரணம் ஏன் நடந்தது என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள உலக நாடுகள் முன்வந்தன. யானைகளின் மாதிரிகளை ஜிம்பாவே நாடு லண்டன் நகரத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.  இப்போது, போட்ஸ்வானா நாடு மேற்கொண்ட ஆய்வுகளின் முதல் கட்ட முடிவுகள் வெளிவந்துள்ளன. நீர்த்துளைகளில் (waterholes) உள்ள சயனோபாக்டீரியாக்கள் வெளியிட்ட நச்சே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. 

சயனோபாக்டீரியாக்கள் நுண்ணிய உயிரினங்கள், அதிகமாக நீர்நிலைகளிலும் சில சமயங்களில் மண்ணிலும் இந்த நுண்ணுயிரியை காணமுடியும். இவ்வகையில் உள்ள எல்லா பாக்டீரியாக்களும் நச்சை உமிழ்வது கிடையாது, சில வகைகள் மட்டுமே இவ்வகை நச்சை உமிழக்கூடியவை. ஆனால் உலகம் வெப்பமடைவதால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால், நச்சை உமிழக்கூடிய இவ்வகை பாக்டீரியாக்கள் அதிகமாக உருவாகுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போட்ஸ்வானா நாட்டின் கால்நடைத்துறையின் அதிகாரியான ரூபன் தெரிவிக்கையில், " எங்களுடைய சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி, இறந்து போன யானைகளின் ரத்த மாதிரிகளில், சயனோபாக்டீரியாக்கள் வெளியிடக்கூடிய "நியூரோ டாக்ஸின்கள்" இருந்தது கண்டறியப்பட்டுள்ளது". 

"ஆனாலும் இன்னும் பலகேள்விகள் உள்ளன, அந்த பகுதிகளில் இருந்த யானைகள் மட்டும் ஏன் இறந்தன? மற்ற விலங்குகளை ஏன் பாதிக்கவில்லை" போன்ற கேள்விகளுக்கான விடைகளை கண்டறியவேண்டும். சில சயனோபாக்டீரியா வகைகள் மட்டுமே மக்களையும், விலங்குகளையும் பாதிக்கும், ஆனால் பொதுவாக அதிக வெப்பம் இவ்வகை சயனோபாக்டீரியாக்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். தென் ஆப்ரிக்காவின் வெப்பம் உலக சராசரியை விட இருமடங்கு அதிகரிக்கிறது. சரியான நேரத்தில், சரியான சூழல், சரியான இடம் கிடைத்தால் இவ்வகை நுண்ணுயிர்கள் பற்றி பரவும் என்கிறார் இவ்வகை பாக்டீரியாக்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் பேராசிரியர் பேட்ரிசியா கில்பர்ட். காலநிலை மாற்றம் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ என்கிற கவலை நாளுக்கு நாள் மேலோங்குகிறது.