இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை திடீரென பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.  லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனெகா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்துள்ளன.  உலகில் 9 நிறுவனங்களின் மருத்துவ பரிசோதனைகள் தற்போது மூன்றாம் கட்டத்தில் உள்ள நிலையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியும் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருந்து வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது கட்ட பரிசோதனையில் குறிப்பிட தகுந்த அளவில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் மனிதர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்,  தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து தடுப்பூசி பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கடந்த செவ்வாய்க்கிழமை இதற்கான தகவலை வெளியிட்டுள்ளது.  தவிர்க்க முடியாத சில காரணங்களால் பரிசோதனையை பாதியில் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான், அதேநேரத்தில் நோயாளியின் நோயின் தீவிரம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இதுபோல பரிசோதனைக்கு நடுவில் விவரிக்கமுடியாத நோய் பாதிப்புகள் இருந்தால் சோதனை நிறுத்தப்படுவது இயல்பான ஒன்றுதான் ஆனால் அதனால் பரிசோதனை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அதே நேரத்தில் அது மறுபரிசீலனை செய்யப்பட  வேண்டிய அவசியம் உள்ளது எனவும்,  அதிக தன்னார்வலர்களை கொண்டு சோதனை நடத்தப்படும் போது இது தவிர்க்க முடியாதது என்றும்  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் இந்த இடைவெளி காலவரிசையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாதபடி நாங்கள் பரிசோதனையை வேகப்படுத்த இருக்கிறோம் எனவும், கடந்த ஆகஸ்ட் 31 முதல் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 30,000 தன்னார்வலர்கள் மத்தியில்  அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வருகிறது எனவும்,  ஏற்கனவே உலக அளவில் 9 நிறுவனங்கள் மூன்றாவது கட்ட பரிசோதனையில் இருந்து வரும் நிலையில்,  அஸ்ட்ராஜெனெகா இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது எனவும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தெரிவித்துள்ளது.  விரைவில் நல்ல முடிவுகளுடன் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த தடுப்பூசி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.