General Election to the UK Parliament today - Theresa May is the PM again

இங்கிலாந்தில் 650 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பிரதமர் தெரசா மேவின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக முடிவு எடுத்ததை அடுத்து, அதுதொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது. 
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம், வரும் 2020-ம் ஆண்டுதான் நிறைவடைகிறது என்றாலும், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி, நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தலை நடத்தப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார். இதற்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது. 

அதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்நாட்டில் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளிலும், இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இத்தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வந்த நிலையில், மான்செஸ்டர் மற்றும் லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள், ஆளும் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. 

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் முதலில் தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சிக்கு 20 சதவீதம் ஆதரவு கூடுதலாக இருப்பதை காட்டின. ஆனால் அண்மையில் வெளியான கருத்துக்கணிப்பின்படி, தொழிலாளர் கட்சியைவிட கன்சர்வேடிவ் கட்சிக்கு ஒரு சதவீதம் மட்டுமே கூடுதல் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தெரசா மே கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியைத் தக்க வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.