கொரோனா வைரஸ் பயத்தால் தனது முகத்தை ஒருவார காலமாக தொடவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியா போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. கோவிட் -19  வைரஸால் அமெரிக்காவில் 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க சுகாதாரத் துறை தீவிரமாக இறங்கி உள்ளது.

கரோனா வைரஸ் தீவிரமாக இருப்பதால் அதன் பரவலை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒருவாரம் ஆகிறது. நான் அதை மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று கிண்டலாக தெரிவித்தார்.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான வூஹான் இருந்து நாடு முழுவதும் பரவிய கரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக பாதிப்பை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 3,000க்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.