OpenAI-யின் முன்னாள் ஊழியர் சுசிர் பாலாஜியின் மரணம் தற்கொலை என அறிவிக்கப்பட்ட நிலையில், எலான் மஸ்க் அதை கொலை எனக் குற்றம் சாட்டியுள்ளார். பாலாஜி, OpenAI-யிலிருந்து விலகி, ChatGPT பற்றி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சுசிர் பாலாஜி, தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது கொலை என xAI நிறுவனர் எலான் மஸ்க் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடனான OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனின் நேர்காணலுக்குப் பிறகு மஸ்க் இந்த கருத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அரசியல் விமர்சகர் டக்கர் கார்ல்சன், சுசிர் பாலாஜியின் மரணம் "நிச்சயமாக ஒரு கொலை" என ஆல்ட்மேனிடம் நேர்காணலில் தெரிவித்தார். பாலாஜியின் தாயார், தனது மகன் ஆல்ட்மேனின் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டதாகக் கூறியதாகவும் கார்ல்சன் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஆல்ட்மேன், தான் காவல்துறையிடம் பேசவில்லை என்றும், பாலாஜியின் தாயாரை அணுக முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் தன்னுடன் பேச மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
யார் இந்த சுசிர் பாலாஜி?
சுசிர் பாலாஜி, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக OpenAI நிறுவனத்தில் பணியாற்றி, ChatGPT-யின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். ChatGPT வெளியான பிறகு, அதன் செயல்பாடுகள் குறித்து அவருக்கு கவலைகள் ஏற்பட்டன. ஆகஸ்ட் 2023-ல், பாலாஜி OpenAI-யிலிருந்து விலகினார். பின்னர், அந்த நிறுவனம் சட்டவிரோதமாக பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை அதன் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்துவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
சான் பிரான்சிஸ்கோ காவல்துறை மற்றும் தலைமை தடயவியல் அலுவலகம் பாலாஜியின் மரணம் தற்கொலை என அறிவித்த நிலையில், பாலாஜியின் பெற்றோர் அதை ஏற்க மறுத்து, அது "கொலை" என்று கூறி வருகின்றனர். அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எலான் மஸ்க் vs சாம் ஆல்ட்மேன்:
மோதல் போக்கு சாம் ஆல்ட்மேன் மற்றும் எலான் மஸ்க்கிற்கு இடையேயான மோதல் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. OpenAI வெற்றி பெறாது என்று கூறி மஸ்க் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ஆனால், OpenAI-யின் வளர்ச்சி அவருக்கு "கோபத்தை" ஏற்படுத்தியுள்ளதாக ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
மஸ்க் OpenAI நிறுவனத்தை இணை நிறுவியவர்களில் ஒருவர். ஆனால், நிறுவனம் லாப நோக்கத்துடன் செயல்பட முடிவெடுத்ததால், 2018-ல் அவர் வெளியேறினார். பின்னர், ChatGPT-க்கு போட்டியாக Grok என்ற AI சேட் போட்டை உருவாக்கிய xAI என்ற தனது சொந்த AI நிறுவனத்தைத் தொடங்கினார்.
இதற்கு முன்னரும், மஸ்க் தனது சமூக ஊடக தளமான எக்ஸ் (X) ஐ தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்துவதாக ஆல்ட்மேன் குற்றம் சாட்டினார். AI நிறுவனங்களுக்கு எதிராக Apple நிறுவனம் போட்டிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மஸ்க் குற்றம் சாட்டியதை அடுத்து இந்த மோதல் போக்கு மீண்டும் தொடங்கியது.
