கொரோனா உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இத்தாலி  மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் 9000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு மருந்து இல்லாததால், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால்,  உலகம் முழுதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர்.

ஆனால் நாடு பேதமின்றி அனைத்து நாடுகளிலும் மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல், கொரோனாவிலிருந்து மக்களை காக்க கடுமையாக உழைத்துவருகின்றனர். சுயநலமின்றி குடும்பங்களை விட்டு, கொரோனா என்ற கொடிய தொற்று நோயிலிருந்து மக்களை காக்க போராடுகின்றனர்.

அப்படி, நேரம் பார்க்காமல் உலகம் முழுதும் உழைக்கும் லட்சக்கணக்கான மருத்துவர்களில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவின் மகளும் ஒருவர். சுதந்திர இந்தியாவின் 9வது பிரதமர் பிவி நரசிம்ம ராவ். இந்தியாவின் பிரதமரான முதல் தென்னிந்தியர் நரசிம்ம ராவ் தான். அவருக்கு பின்னர் தான் தேவகௌடா(கர்நாடகா). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நரசிம்ம ராவ், 1991ல் ராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். 1991 முதல் 1996 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார், ஆந்திராவின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். இப்படியாக முதலமைச்சராகவும் பிரதமராகவும் இருந்து நாட்டு மக்களுக்காக பணியாற்றியிருக்கிறார்.

அவரது இளைய மகளான விஜயா சோமராஜு ஒரு மருத்துவர். அவரது கணவர் பிரசாத்தும் மருத்துவர். இருவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர். கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் தான் மருத்துவ பணியாற்றிவருகின்றனர். தொற்று நோய் நிபுணரான விஜயா சோமராஜூ, அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் மருத்துவராக இருப்பதுடன், இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

இந்நிலையில் தொற்று நோயான கொரோனா, விஜயா சோமராஜூ எது ஸ்பெலிஷ்ட்டோ, அது சார்ந்த நோய் என்பதால், கொரோனா நோயாளிகளை அதிலிருந்து காக்க, ஒரு நாளைக்கு 15 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக உழைத்துவருகிறார். அதுவும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமாக இருக்கும் நிலையில், அந்த சவால்களை எதிர்கொண்டு சிகிச்சையளித்து வருகிறார் விஜயா சோமராஜூ. கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் கூட கொரோனா தொற்று ஏற்பட்டு அச்சுறுத்திவருகிறது. ஆனால் சுயநலமில்லாமல், கொரோனாவை விரட்ட போராடும் லட்சக்கணக்கான மருத்துவர்களில் விஜயா சோமராஜூம் தன்னை இணைத்துக்கொண்டு தனது சேவையை சிறப்பாக செய்துவருகிறார்.