சேர்த்துவைத்த மொத்தமும் போச்சு.. ஆன்லைன் மோசடியில் சிக்கிய முதியவர் - சிங்கப்பூரர்களே ஜாக்கிரதையா இருங்க!
சிங்கப்பூரர்களுக்கு, அந்நாட்டு சைபர் குற்றப்பிரிவு போலீசார் அடிக்கடி அறிவுறுத்தும் ஒரு விஷயம் தான் மோசடி. கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஆன்லைன் மூலம் நடக்கும் குற்ற செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அந்த வகையில் 72 வயது முதியவர் ஒருவர் தனது வாழ்வாதாரத்தையே இப்பொது இழந்துள்ளார்.
சிங்கப்பூரில் 72 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் சில உணவுப் பொருட்களை ஆர்டர் செய்ய விரும்பியுள்ளார். அப்பொழுது குறிப்பிட்ட ஒரு உணவு வகையை டிஸ்கவுன்ட் முறையில் பெற ஒரு புதிய செயலியை அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று அவர் அந்த விளம்பரத்தில் பார்த்துள்ளார்.
முதலில் இது ஏதோ ஏமாற்று வேலை என்று நினைத்த அவர், உடனடியாக அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்து அந்த சலுகை குறித்து கேட்டு நிலையில், அந்த சலுகை உண்மையில் அமலில் இருக்கிறது, நீங்கள் அந்த செயலியை உங்கள் போனில் தரவிறக்கம் செய்துவிட்டு, அதிலிருந்து ஆர்டர் செய்தால் ஐந்து சிங்கப்பூர் டாலருக்கு உங்களுக்கு அந்த உணவு கிடைக்கும் என்று மறுமுனையில் இருந்த நபர் தெரிவித்துள்ளார்.
அந்த 72 வயது நபரும், ஒருவேளை இது மோசடி காரர்களின் வேலையாக இருந்தாலும் தனக்கு ஐந்து டாலர் தானே போகும் என்று நினைத்து, அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த செயலியை தரவிறக்கம் செய்துள்ளார். அதிலிருந்து அவர் உணவு ஆர்டர் செய்த நிலையில் சுமார் அரை மணி நேரத்திற்குள் இரண்டிலிருந்து மூன்று முறை அவருடைய மொபைல் போன் ரீ ஸ்டார்ட் ஆகியுள்ளது.
இதை கண்டு அதிர்ந்த அவர் தனது ஃபோனில் உள்ள அந்த புதிய செயலியை அழிக்க முயன்றும் அவரால் அதை செய்ய இயலவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவருடைய மொபைல் போன் முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து அவருடைய மொபைல் போன் தானாக ஆன் ஆனா நிலையில் அவருடைய கணக்கிலிருந்து சுமார் 70 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் மோசடிக்காரர்களால் திருடப்பட்டுள்ளது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு அவர் தகவல் கொடுத்த நிலையில் தற்போது அவர் அளித்த புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மோசடிக்காரர்களின் செயலாக இருக்கும் என்று எண்ணியும் தான் சற்று அஜாக்கிரதையாக இருந்து விட்டதாக அந்த 70 வயது முதியவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
70,000 சிங்கப்பூர் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் அந்த பணத்தை திருப்பி பெற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டாலும், தனது வாழ்நாள் முழுவதும் அவர் கஷ்டப்பட்டு சேமித்த காசை ஒரே ஒரு தவறான செயலின் மூலம் இழந்தது எண்ணி அவர் வருந்துவதாக சிங்கப்பூர் செய்தி நிறுவனங்களிடம் கூறியுள்ளார். அந்த 72 வயது நபர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது சிங்கப்பூர் கிரைம் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருக்க அடிக்கடி தாங்கள் அறிவுறுத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற போலியான செய்திகள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக காவல் நிலையத்தை அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.