சில நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொரோன பரவல்  உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை, 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், ‘’ஒப்பீட்டளவில் கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் தீவிரமடைந்துள்ளது. 

சிறிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. உலக அளவிலான மொத்த கொரோனா பரவலில் மூன்றில் இரண்டு பங்கு, 10 நாடுகளில் சேர்ந்தவையாக உள்ளது. அந்த நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை வழங்காமல் மக்களை காக்க மேலும் போராட வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 2,000க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கவில் இதுவரை, 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் உள்ளன. 3, 4வது இடங்களில் இந்தியாவும், ரஷ்யாவும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.