தேர்வுகள் என்றாலே மாணவர்கள் அனைவருக்கும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அதிலும் பொதுத்தேர்வுகள் என்றால் இன்னும் பரபரப்புடன் காணப்படுவார்கள். அந்நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தினால் தேர்வை கோட்டை விடுபவர்களும் உண்டு. தேர்வுகளில் ஏற்பட்ட தோல்வியினால் மனமுடைந்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டவர்களும் உண்டு. தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க உளவியல் நிபுணர்கள் பல்வேறு வழிமுறைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க அவர்களை சவக்குழியில் படுக்கவைக்கும் வினோத முறையை நெதர்லாந்து பல்கலைக்கழகம் கையாள்கிறது.

நெதர்லாந்து நாட்டின் நிஜ்மேகன் நகரில் உள்ள ராட் பௌடு பல்கலைகழகம் இந்த முறையை கையாள்கிறது. அரைமணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை சவக்குழியில் 
மாணவர்கள் படுக்க வைக்கப்படுகிறார்கள்.  ‘வித்தியாசமாக இருங்கள்’ என்ற படுக்கையுடன் ஒரு போர்வை, யோகா பாய் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. மாணவர்களிடையே இது மிகவும் பிரபலமாகியுள்ளது.

 ‘18, 19 வயதுகளில், வாழ்க்கையின் முடிவு, மரணம் போன்றவற்றை பற்றி மாணவர்களிடம் பேசுவது மிக கடினம், ஆனால் இந்த சவக்குழியில் படுப்பது, இந்த பூமியில் நமது வாழ்நாள் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என பல்கலைக்காக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் ‘மரிப்பாய் ஒரு நாள் நினைவிருக்கட்டும்’ என எழுதப்பட்ட பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.