எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட உலகில் 70 நாடுகளில் உள்ள சிகரங்கள் மீது ஏறி சாதனை படைத்த ஜப்பானிய சாதனைப்பெண் ஜுன்கோ தபி மரணமடைந்தார். இவருக்கு வயது 77.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிகாரு எனும் மலைக்கிராமத்தில் கடந்த 1939-ம் ஆண்டு ஜுன்கோ தபி பிறந்தார். இவர் 4-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போது தனது ஆசிரியருடன் ஜப்பானில் உள்ள மவுன்ட் நசு மீது ஏறினார். இதுதான் இவரின் முதல் மலை ஏற்றமாகும்.
அதன்பின், ஜுன்கோ தலைமையில் வந்த ஜப்பான் மகளிர் அணியினர் கடந்த 1975ம் ஆண்டு மே 16-ந்தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். இதன்மூலம் எவரெட்ஸ்ட சிகரத்தை அடைந்த முதல் பெண் எனும் பெருமையை ஜுன்கோ பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 1992-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள 7 முக்கிய உயரமான சிகரங்களில் ஏறி இறங்கிய பெண் எனும் பெருமையையும் ஜுன்கோ பெற்றார்.
, ‘ வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிடு’ என்பது தான் ஜுன்காவின் முக்கிய தத்துவமாக இருந்தது. கடந்த 1991-ம் ஆண்டு அசோசியேட் பிரஸ்சுக்கு அளித்த பேட்டியில் ஜுன்கோ கூறுகையில், “ நான் இன்னும் உலகம் முழுவதும் உள்ள சிகரங்களில் ஏற விரும்புகிறேன். பெண்களின் சுதந்திரத்தை அதிகமாக விரும்புகிறேன். ஆனால், பெரும்பாலான ஜப்பானிய ஆண்கள், பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், வீட்டுவேலை செய்து கொண்டு இருக்கவேண்டும் என்ற நினைக்கிறார்கள். இந்த சிந்தனையை உடைக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், எவரெஸ்ட் சிகரம் சீர்கேடு குறித்து ஜப்பானின் யூசு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து, முதுகலைப்பட்டத்தை ஜுன்கோ பெற்றார். அதன்பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜுன்கோ தபி டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
