ஆயுர்வேத மருந்தால் கொரோனாவிலிருந்து மீண்டாரா இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்? இளவரசரின் செய்தித்தொடர்பாளர் மறுப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத மருத்துவ முறைப்படி அளித்த சிகிச்சையால் கொரோனாவிலிருந்து மீண்டு பூரண குணமடைந்துள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துவருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவிட்டது. பலியானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்துவிட்டது.
கொரோனாவிற்கு மருந்து இல்லாத நிலையில், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று சாமானியர்கள் முதல் உயர் பாதுகாப்பு கொண்ட மிகப்பெரிய உலகத்தலைவர்கள் வரை பாரபட்சமின்றி பாதித்தது.
அந்தவகையில், கொரோனா பாதிப்பிற்கு உள்ளான 71 வயதான இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தமிழர் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேத முறைப்படி அளிக்கப்பட்ட சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அளித்த ஆயுர்வேத சிகிச்சையால் தான் இங்கிலாந்து இளவரசர் பூரண குணமடைந்திருப்பதாக ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்துகளால் தான் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் குணமடைந்ததாக கூறியுள்ள ஸ்ரீபாத் நாயக், பெங்களூரில் ”சக்யா'”என்ற ஆயுர்வேத ரெசார்ட்டை நடத்தி வரும் ஒரு ஆயுர்வேத பயிற்சியாளர்தான் இளவரசர் சார்லஸுக்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்தை அளித்துள்ளதாகவும் அதன் விளைவாகத்தான் இளவரசர் சார்லஸ் முழுவதுமாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் என்றும் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தடுக்க ஹோமியோபதி மருத்துவ முறையை பயன்படுத்த ஆயுஷ் அமைச்சகம் ஏற்கனவே ஒரு ஆலோசனையை வழங்கியது. கொரோனாவிற்கு எதிரான பாரம்பரிய மருந்துகள் குறித்து மற்ற நாடுகளிலும் பேசப்பட்டு வருகிறது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சீனா பாரம்பரிய மருத்துவத்தை (டி.சி.எம்) பயன்படுத்தியது. டி.சி.எம் என்பது 3,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான சிகிச்சை முறையாகும். எனவே, பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்தி கொரோனாவை ஒழிக்க முடியும் என்று கூறினார். அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையானது.
அதேநேரத்தில் இதுகுறித்து பேசியுள்ள ஆயுர்வேத மருத்துவர் மத்தாய், இங்கிலாந்து இளவரசர் சார்லஸும் அவரது மனைவியும் எங்களது ஆயுர்வேத ரிசார்ட்டுக்கு வாடிக்கையாளர்கள் தான். அவர்களுக்கு நான் என்ன மருந்து கொடுத்தேன் என்பதை என்னால் கூறமுடியாது. மருத்துவ விதிமுறைகளின் படி அதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நான் இவர்களுக்கு கொடுத்த மருந்தை இதுவரை வேறு எந்த கொரோனா நோயாளிக்கும் கொடுத்ததில்லை என்றார்.
பிரிட்டனில் கொரோனாவை கையாள்வதற்காக தங்களால் முடிந்தவரை பணியாற்றிவரும் தமிழர்களுக்கு இங்கிலாந்து இளவரசர் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இங்கிலாந்து ஆயுர்வேத மருத்துவ முறைப்படி மட்டுமே இங்கிலாந்து இளவரசர் குணமடையவில்லை என்றும் வேறு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டதாக சார்லஸின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.