உலகளவில் பெரும் அச்சுறுத்தலை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி வரும் வைரஸ் மனித இனத்திற்கு பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 29,20,877 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வைரஸின் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2,03,272 மக்கள் தங்கள் பலியாகியுள்ளனர். 18,80,664 மக்கள் தனிமை சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவர்களில் 57,864 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் இனி வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. 

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருக்கின்றன. அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்ததுள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் இங்கிலாந்தும் இணைந்துள்ளது. அங்கு 1,48,377 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 4,913 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 20,319 உயிரிழந்திருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 813 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பலி தொடர்ந்து அதிகரித்து வருவதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு மேற்கொண்டுள்ளது.

உலகளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு அமெரிக்கா விளங்குகிறது. அங்கு 9,60,896 மக்கள் பாதிக்கப்பட்டு 54,265 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக இத்தாலியில் 1,95,351 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டு 26,384 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 22,902 பேரும் பிரான்சில் 22,614 பேரும் மரணமடைந்துள்ளனர். 4 நாடுகளில் கொரோனா பலி 20 ஆயிரத்தைக் கடந்த நிலையில் 5வது நாடாக இங்கிலாந்தும் இணைந்துள்ளது. ஆறுதல் தரும் செய்தியாக உலகம் முழுவதும் இதுவரை 8,36,941 மக்கள் கொரோனா வைரஸில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.