'X Hiring'... அடுத்த அதிரடி: வேலைவாய்ப்பு பிரிவை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!
எலான் மஸ்க் தனது X தளத்தில் வேலைவாய்ப்பு பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளார். இது லிங்க்டின் உள்ளிட்ட வேலைவாய்ப்பு தளங்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டரை அண்மையில் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை அதில் செய்து வருகிறார்.
அந்த வகையில், ட்விட்டரின் அடையாளமான நீலக் குருவி லோகோ மற்றும் பெயரை எலான் மஸ்க் அண்மையில் மாற்றினார். கிடைக்கும்பட்சத்தில் ட்விட்டரின் லோகோ X எனவும், அதன் பெயர் X எனவும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எலான் மஸ்க் தனது X தளத்தில் வேலைவாய்ப்பு பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளார். இது லிங்க்டின் உள்ளிட்ட வேலைவாய்ப்பு தளங்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. அதன்படி, X Hiring எனும் பீட்டா வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு வெரிஃபய்டு கணக்குகளுக்கு மட்டும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் X தளத்தின் அதிகாரப்பூர்வ X Hiring என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
சோதனைக் கட்டத்தில் இருக்கும் இந்த அம்சத்தின் மூலம், வெரிஃபய் செய்யப்பட்ட நிறுவனங்கள் அவர்களின் X பக்கத்தில் வேலைவாய்ப்பு குறித்து பதிவிட்டுக் கொள்ள முடியும். இந்த வசதியை பிரீமியம் சந்தாதாரர்கள் மட்டுமே அணுக முடியும். இந்த புதிய அம்சத்துக்கான வெரிபிகேஷன் ஸ்டேடஸை பெற, மாதந்தோறும் இந்திய மதிப்பில் ரூ.82,300 சந்தா செலுத்த வேண்டும்.
X Hiring மூலம் நிறுவனங்கள் வேலைதேடுவோரின் பட்டியலை பெற முடியும். அதாவது வேலை தேடுவோரின் தரவுகளை நிறுவனங்களால் பெற முடியும். அதேபோல், விண்ணப்பதாரர்கள் X இல் நேரடியாக வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.