Dont care about the framer protest - radhamohan singh doing yoga with baba ramdev
மத்திய பிரதேசத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் கொல்லப்பட்டு கிடக்கிறார்கள், மஹாராஷ்டிராவில் விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடிக்காக போராடி வருகிறார்கள், இதில் எதையும் கண்டுகொள்ளாமல், சாமியார் பாபா ராம்தேவ் நடத்தும் யோகா விழாவில் “ரொம்ப கூலாக” மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் யோகா செய்தார்.
சாமியார் பாபா ராம்தேவ் பீகார் மாநிலம், மோத்திஹரி நகரில் 3 நாட்கள் யோகா திருவிழா நடத்தி வருகிறார். இதில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள்,முக்கிய வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டு யோகா செய்து வருகிறார்கள்.
வரும் 23-ந்தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச யோகா திருவிழாவை முன்னிட்டு இந்த யோகா முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மஹாராஷ்டிராவில் விவசாயிகள் தாங்கள் வங்கியில் பெற்ற பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளைபொருட்களுக்கு விலையை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் காய்கறிகளையும், பால் உள்ளிட்ட பொருட்களையும் சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல, மத்தியப்பிரதேச மாநிலம், மாண்டசோர் மாவட்டத்திலும்,விவசாயிகள் தங்களின் பயிர்கடன் தள்ளுபடியை செய்யக்கோரியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை அதிகப்படுத்த கோரியும் போராட்டம் நடத்தினர்.இதில்வன்முறை வெடித்ததால், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனால், பதற்றம் நிலவியுள்ளது.

ஆனால், இந்த பிரச்சினைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், பாபா ராம்தேவுடன் சேர்ந்து யோகா செய்துள்ளார்.இது தொடர்பான புகைப்படம் பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டரில் வெளியாகி பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,மராட்டிய முன்னாள் முதல்வருமான பிரிதிவிராஜ் சவான் கூறுகையில், “ மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் விவசாயிகள் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோதிலும், போராட்டம் நடத்தியபோதிலும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பிரதமர் மோடி என்ன செய்கிறார். அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்.
மாண்டசோர் நகருக்கு சென்று விவசாயிகளிடம் அமைச்சார் ராதாமோகன் சிங் பேசுவதை விட்டு, யோகா செய்கிறார்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல, நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ராம் நாயக் ஆகியோர் சாமியார் பாபா ராம்தேவ் நடத்தும் யோகா முகாமில் கலந்துகொண்டு யோகா செய்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
