இந்தியாவை மிரட்டி உலக சுகாதார நிறுவனத்துக்கே ஆப்பு... தெனாவெட்டின் உச்சத்தில் ட்ரம்ப்..!
நேற்று இந்தியாவை மிரட்டிய அவர், இப்போது உலகச் சுகாதார அமைப்பு சீனாவுக்கு அதிக சாதகமாகச் செயல்படுவதாகக் கூறி அந்த அமைப்புக்கு தங்களது நிதி பங்களிப்பை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுதும் தலைவிரித்தாடும் நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெனாவெட்டின் உச்சத்தில் பேசியும், மிரட்டியும் வருகிறார். நேற்று இந்தியாவை மிரட்டிய அவர், இப்போது உலகச் சுகாதார அமைப்பு சீனாவுக்கு அதிக சாதகமாகச் செயல்படுவதாகக் கூறி அந்த அமைப்புக்கு தங்களது நிதி பங்களிப்பை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
நேற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என மிரட்டியதைத் தொடர்ந்து இன்று, “உலகச் சுகாதார அமைப்புக்குச் செலவிடும் தொகையை நிறுத்தி வைக்கப் போகிறோம். மிகவும் பெரிய அளவில் நிறுத்தி வைக்கப் போகிறோம், இது வேலை செய்தால் பிரமாதம்தான். அவர்கள் ஒவ்வொரு நடவடிக்கையையும் தவறாக செய்கிறார்கள் இது நல்லதல்ல’’ என மிரட்டியுள்ளார். ஜெனிவாவில் தலைமைச் செயலகம் கொண்ட உலகச் சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா பெரிய அளவில் நிதியைப் பங்களிப்பு செய்து வருகிறது.
“நாம்தான் உலகச் சுகாதார அமைப்பின் பெரும்பங்கு நிதிக்கு பங்களிப்புச் செய்கிறோம். ஆனால் நான் முன்பே பயணத்தடை விதித்த போது உலகச் சுகாதார அமைப்பு என் முடிவை விமர்சனம் செய்தது. அவர்கள் தவறான தகவலை பரப்பிவிட்டனர். நிறைய விஷயங்களில் உலகச் சுகாதார அமைப்பு தவறு செய்து விட்டது. நிறைய தகவல்கள் அவர்களுக்கு கிடைத்தும் அவர்கள் அதனை தெரிவிக்க மறுத்து விட்டனர், அவர்கள் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.
58 மில்லியன் டாலர்கள் நிதியை நாம் உலகச் சுகாதார அமைப்புக்குப் பங்களிப்பு செய்கிறோம். சிலவேளைகளில் இதை விடவும் அதிகமாக அளித்து வருகிறோம். அவர்களது திட்டங்களுக்கும் பெரிய அளவில் உதவி செய்கிறோம்.
ஆனால், இதையனைத்தையும் மறு பரிசீலனை செய்ய விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் தவறு செய்து விட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பாகவே பயணத்தடைகளை பரிந்துரைத்திருக்க வேண்டும். இதன் தாக்கம் அவர்களுக்கு தெரியும். தெரிந்திருக்க வேண்டும். இல்லை நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும். எனவே கவனமாக இதனை ஆராய்கிறோம். எனவே உலகச் சுகாதார அமைப்பிற்கு செலவிடும் தொகையை நிறுத்தி வைக்கப் போகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.