ஆபரேஷன் செய்த மருத்துவரின் கை நடுங்கியதால் மரண படுக்கையில் கிம் ஜாங் உன்..? வெளிவந்தது அதிர்ச்சி தகவல்
கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் உலாவரும் நிலையில், ஜப்பான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னாட்டு அமைப்பான ஐ.நா-வின் பேச்சையே மதிக்காமல், தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளின் மூலமாக உலக நாடுகளை அச்சுறுத்திவந்தவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
ஐ.நா தீர்மானத்தை மீறி அணு ஆயுத சோதனைகளை தொடர்ச்சியாக செய்ததால், வடகொரியா மீது ஐநா பொதுச்சபை, பாதுகாப்பு சபை ஆகிய இரண்டுமே பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் அடங்காத வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்தார். அவரின் செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே மிரட்டவும் செய்தார். அதன்பின்னர் இருவரும் மோதிக்கொண்டு, பின்னர் சமாதானமடைந்தனர்.
அவ்வாறு, ஐநாவிற்கே கட்டுப்படாத, அமெரிக்காவுக்கே சவால் விடுத்தவர் கிம் ஜாங் உன். கொரோனாவால் உலகமே பேரழிவுகளை சந்தித்து இக்கட்டான சூழலில் இருந்துவரும் இந்த நிலையில், கொரோனாவுக்கு நிகராக கிம் ஜாங் உன் பரபரப்பாகியிருக்கிறார்.
அண்மையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் கோமாவில் இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு பீதியை கிளப்பிவருகின்றன. அனைத்து அரசு விழாக்களிலும் முன்நின்று செயல்படும் கிம் ஜாங் உன், அவரது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில்(ஏப்ரல் 15) கலந்துகொள்ளாதது தான், இத்தனை பரபரப்புக்கு அடித்தளமாக அமைந்தது.
கிம் ஜாங் உன்னின் அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாகவும், அதனால் அவர் கோமாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.
இந்நிலையில், ஜப்பான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் மேலும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது. வடகொரியாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றபோது திடீரென கிம் ஜாங் உன் நெஞ்சுவலியால் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கிம் ஜாங் உன்னுக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது சாதாரண ஸ்டண்ட் பொருத்தும் செயல்முறையின் போது மருத்துவரின் கை நடுங்கியதால், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அதனால் கோமாவில் இருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங் உன் குறித்த பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வராதது, பல வதந்திகளுக்கும் வழிவகுக்கிறது. கிம் ஜாங் உன், அதிகமான உடல் எடை, புகைப்பழக்கத்தால், இதய பாதிப்படைந்திருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.