பாகிஸ்தானில் பெய்துவரும் தொடர் மழையில் மின்னல் தாக்கி, 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், தார்பார்க்கர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  மழையின் இடையே பயங்கர  மின்னல் ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள மித்தி, சாச்சீ, ராம்சிங் சோதா  ஆகிய கிராமங்களை அடுத்தடுத்து,  பயங்கர இடி முழக்கத்துடன் மின்னல் தாக்கியது. இதில் 10 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள், மின்னல் தாக்கியதில் உடல் கருகி இறந்தன. 

அதுமட்டுமல்லாமல், மின்னல் தாக்குதல்களால் ஏற்பட்ட தீ விபத்துகளினால் நூற்றுக்கணக்கான விலங்குகள் அழிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் மின்னல் தாக்கி படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மிதி, இஸ்லாம்கோட் மற்றும் சாசாரோ நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என பாதிப்புகளை ஆய்வு செய்த அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.