ஜோ பிடன் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு ஆபத்து: சீனாவுடனான நெருக்கத்தை சுட்டி காட்டி எச்சரித்த ஜூனியர் ட்ரம்ப்.
இது வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, ஒருவேளை ஜோ பிடன் வெற்றிபெற்றால் சீனாவுடனான அவரது அணுகுமுறைகள் மென்மையாக இருக்கும் கூடும் என்பதால் அவர் இந்தியாவுக்கு சரியானவராக இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபராக போட்டியிடும் ஜோ பிடன், சீனாவுடன் மென்மையான அணுகுமுறை கொண்டவர் எனபதால் அவர் இந்தியாவிற்கு சரியானவராக இருக்க முடியாது என அதிபர் ட்ரம்பின் மகன் ஜூனியர் ட்ரம் தெரிவித்துள்ளார். தனது தந்தைக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர்-3 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் கொரோனாவுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம்சூடுபிடித்துள்ளது.
கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அதிபர் டிரம்ப் தற்போது பிரச்சார களத்திற்கு வந்துள்ளார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றிய அவர் ஜோ பிடன் ஒரு வேளை அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றால், அமெரிக்கா புலம்பெயர் சமூக விரோத கும்பல்களின் கூடாரமாக மாறும் என எச்சரித்துள்ளதுடன் தான் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய சூழல் வரும் எனவும் கூறியுள்ளார்.இந்நிலையில் ட்ரம்புக்கு ஆதரவாக அவரது மகன் ஜூனியர் ட்ரம்ப் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கணிசமான அளவில் இருப்பதால் இத்தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அதே வேளையில் பெரும்பாலான அமெரிக் வாழ் இந்தியர்கள் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியர்களை குறிவைத்து ஜூனியர் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். நியூயார்க்கில் உள்ள லாங் தீவில் இந்திய-அமெரிக்க சங்கத்தின் உறுப்பினர்களிடம் ஜூனியர் ட்ரம்ப் வாக்கு சேகரித்தார். இப்போது பேசிய அவர், இந்தியர்கள் குறிப்பாக சீனாவின் ஆபத்தை புரிந்து கொள்ள வேண்டும், சீனா எவ்வளவு ஆபத்தானது என்பது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமே தெரியும்.
இது வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, ஒருவேளை ஜோ பிடன் வெற்றிபெற்றால் சீனாவுடனான அவரது அணுகுமுறைகள் மென்மையாக இருக்கும் கூடும் என்பதால் அவர் இந்தியாவுக்கு சரியானவராக இருக்க முடியாது எனக் கூறியுள்ளார். அதேபோல தனது லிபரல் பிரிவிலிஜ் புத்தகத்தின் வெற்றியைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் ஜூனியர் டிரம்ப் இதே கருத்தை வலியுறுத்தினார். முழுக்க முழுக்க அந்த புத்தகத்தில் ஜோ பிடன் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக அவரது மகன் ஹண்டர் பிடனுக்கு சீனா 1.5 பில்லியன் கொடுத்தது எப்படி என்ற விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் பிடனுடன் சேர்த்து அவரது குடும்பத்தையே வாங்க வேண்டும் என்பதில் சீனா உறுதியாக உள்ளது.
இது அனைத்திற்கும் சீனா மீதான அவர்களின் மென்மையான அணுகுமுறையே காரணமாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் பிடனின் குடும்பத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை நியூயார்க் போஸ்ட் வெளியிட்டிருப்பதை மேற்கோள் காட்டும் ஜூனியர் ட்ரம்ப், ஜோ பிடன் இந்தியாவுக்கு சரியானவராக இருக்க முடியாது என்பதையும் சுட்டி காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜோ பிடன் முற்றிலுமாக புறக்கணித்துள்ளார்.