ஒருத்தரும் மிஸ் ஆக கூடாது... அனைவருக்கும் டெஸ்ட் எடுக்க ஆயத்தமாகும் சீனா..!
முதற்கட்டமாக சாயோங் மாவட்டத்தில் உள்ள 35 லட்சம் பேருக்கான பரிசோதனைகள் நிறைவுற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள 2.2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய பீஜிங் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சாயோங் மாவட்டத்தில் இதேபோன்று பெரும்பாலானோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு மாவட்டத்திலும் கொரோனா பரவல் ஏற்படலாம் என்ற காரணத்தால் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பரிசோதனை நடத்தப்படுவதை அடுத்து, ஷாங்காய் நகரில் பிறப்பிக்கப்பட்டதை போன்ற ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மாவட்ட மக்கள் ஆழ்ந்துள்ளனர். முதற்கட்டமாக சாயோங் மாவட்டத்தில் உள்ள 35 லட்சம் பேருக்கான பரிசோதனைகள் நிறைவுற்றதை அடுத்து, நேற்று (திங்கள் கிழமை) இரவு நகர் முழுக்க கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளதாக பீஜிங் அரசு தெரிவித்தது.
கொரோனா வைரஸ் பரிசோதனை:
ஒரு நாள் விட்டு, ஒரு நாள் என மொத்தம் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இதில் பாதிப்பு உறுதியாகும் பட்சத்தில், தொற்றாளர்களை தனிமைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி சாயோங் மாவட்டத்தில் மொத்தம் 36 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவர்களில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா தொற்றை இல்லை என உறுதியாகி இருக்கிறது.
இந்த நகரில் 33 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இது ஏப்ரல் 24 ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது அதிகம் ஆகும். ஏப்ரல் 24 ஆம் தேதி 19 பேருக்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டது. ஏப்ரல் 22 ஆம் தேதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் படி பீஜிங்கில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 103 ஆக இருக்கிறது.
ஊரடங்கு அச்சம்:
தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், மக்கள் ஊரடங்கு அச்சம் காரணமாக அதிக பொருட்களை வாங்க குவிந்தனர். இதன் காரணமாக கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் அனைத்தும் வேகமாக விற்றுத் தீர்ந்தன. இதை அடுத்து நேற்று தான் புது சரக்குகள் கடைகளை வந்தடைந்தன. தற்போது பொருட்களின் வினியோகம் சீராக இருக்கிறது என நகர அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.
தீவிரம்:
இதுதவிர சீனாவின் சி-செங், டாங்செங், ஹைடென், ஃபெங்டை, ஷிஜிங்ஷான், ஃபாங்ஷான், டாங்சௌ, ஷூன்யி, சாங்பிங், டாக்சிங், பீஜிங் பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி பகுதி, சு ஹெியன் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது என பீஜிங் நகர அறசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.